×
Saravana Stores

கன்னிவாடி சந்தையில் ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

தாராபுரம்: கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு வரும் ஆடுகளின் இறைச்சி கால்சியம் சத்து நிறைந்ததுடன் தனி சுவையுடன் இருப்பதாக இறைச்சி பிரியர்கள் விரும்புவதால் கன்னிவாடி பகுதி ஆடுகளுக்கு வெளி மாநிலங்களிலும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் கன்னிவாடி ஆட்டு சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். இதேபோல், கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக கடுமையான கோடை வெயில் காரணமாக மேய்ச்சல் நிலங்களில் புல், பூண்டுகள் கூட கருகி விட்டதால் ஆடுகளுக்கு உணவு பற்றாக்குறை இருந்து வருகிறது.

இதனால் ஆட்டு தீவனங்களை அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்கி தங்களது வளர்ப்பு ஆடுகளை பாதுகாத்து வருவதில் பெரும் சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர். இருப்பினும், கடந்த 2 வாரங்களாக கோயில் திருவிழாக்கள் காரணமாக கிடா வெட்டு விருந்துகளுக்கு ஆடுகள் விலை போனதால் நல்ல விலை கிடைத்தது. கடந்த இரண்டு வாரங்களாக நல்ல விலை கிடைத்ததை நம்பி நடப்பு வாரத்திலும் அதிக அளவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை லாரிகளில் ஏற்றி வந்த விவசாயிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த வாரங்களில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.6000 என விற்பனையானது. இந்த வாரம் சற்று விலை குறைந்து 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.5500க்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆடு வளர்க்கும் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கன்னிவாடி சந்தையில் ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kanniwadi market ,Tarapuram ,Kanniwadi ,Coimbatore ,Pollachi ,Udumalai ,Dinakaran ,
× RELATED தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை...