×
Saravana Stores

திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பஸ், வேன்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு

திண்டுக்கல்: தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகளில் உள்ள 355 வாகனங்கள் மாணவ, மாணவிகள் அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள ஆர்டிஓ அலுவலக மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, காவல் துறை டிஎஸ்பி ஜோசப் நிக்சன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி வாகனத்தில் படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், அவசரகால வழி, இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, சிசிடிவி கேமரா ஆகியவை முறையாக உள்ளதா எனவும், மேலும் வண்டியின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் சிசிடி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என ஆகியோர் ஒவ்வொரு வாகனத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 11 வாகனத்தில் சிறு, சிறு குறைபாடுகள் உள்ளதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக கால அவகாசம் வழங்கி குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் வந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஒரு வாகனத்தில் வாகன உரிமம் புதுப்பிக்காமல் இருப்பதை கண்டுபிடித்து அதனை உடனடியாக புதுப்பிக்க உத்தரவு பிறப்பித்தனர். முன்னதாக வாகனத்தில் பயன்படுத்தக்கூடிய தீயணைப்பு கருவிகளை எவ்வாறு முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதை தீயணைப்பு துறை சார்பில் செய்முறை விளக்கம் அளித்து காண்பித்தனர்.

 

The post திண்டுக்கல்லில் தனியார் பள்ளி பஸ், வேன்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu ,CBSC ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...