கும்பகோணம், மே5: கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை திடீரென தார் சாலை உள்வாங்கியதில் சுமார் 5 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சாலையில் ஆங்காங்கே சில அடி தூரத்துக்கு வெடிப்பும் ஏற்பட்டது. பூகம்பம் வந்ததைபோல் திடீரென ஏற்பட்ட இந்த பள்ளத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பாதாள சாக்கடை மெயின் குழாய் செல்லும் திறப்பானில் இருந்து சாக்கடை நீர் சாலையில் ஏற்பட்ட பள்ளம் வழியாக வெளியே வந்து தெருவில் ஓடியது. இது குறித்த தகவலறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் இயந்திரங்கள்,பேரிகார்டுகளை வைத்து சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த வழியாக கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தி மாற்று வழியில் அனுப்பினர். இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் சாலையின் ஒரு ஓரமாக அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தார் சாலை உள்வாங்கி 5 அடி பள்ளம் ஏற்பட்டது appeared first on Dinakaran.