கோவில்பட்டி, மே 5: கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பைக்குகள், மினிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் இருந்து வெளியூருக்கு ரேஷன் அரிசி மூடைகள் மினிவேனில் கடத்தப்படுவதாக எஸ்பி தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி தனிப்பிரிவு எஸ்ஐ ஸ்டீபன்ராஜ், ஏட்டுகள் முத்துராமலிங்கம், முத்துமாரி ஆகியோர் சுப்பிரமணியபுரத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வீட்டிலிருந்து மினிவேனில் ரேஷன் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. போலீசாரை கண்டதும் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களில் 6 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.
விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி ஊரணி தெருவைச் சேர்ந்த சிவராமகுமார் (27), தங்கசரவணன் (35), செல்வராஜ் மகன்கள் அஜய் (20), திருப்பதி, பிரசாந்த் (29), செக்கடி தெருவைச் சேர்ந்த மாரிராஜா (21) என்பது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் தலா 52 கிலோ கொண்ட 23 மூடைகளில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 பைக்குகள், மினிவேனை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கோவில்பட்டியில் மினிவேனில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 6 பேர் கைது appeared first on Dinakaran.