* வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் நிம்மதி
* மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் உடைந்தது
* அக்னி தொடங்கிய முதல்நாளில் 110 டிகிரி வெயில் வாட்டியது
ேவலூர், மே 5: அக்னி தொடங்கிய முதல்நாளில் 110 டிகிரி வெயில் வறுத்தெடுத்த நிலையில், மாலையில் வேலூர், காட்பாடியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்தே பல்வேறு நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. கோடைக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த வாரம் முதல் தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 1ம் தேதி அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது. தொடர்ந்து தினந்தோறும் 105 டிகிரிக்கு குறையாமல் வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் என்கின்ற கத்திரி வெயில் தொடங்கியது. இதனால் நேற்று காலை 9 மணிக்கே உச்சி வெயில் போல் வாட்டி எடுத்தது. சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் அனல் காற்று வீசியதால் அவதியடைந்தனர். வெயிலில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் திகைத்தனர். நேற்று 110 டிகிரி வெயில் பதிவானது.
இந்நிலையில் மாலை 3 மணி முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4.30 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியதால் புழுதி பறந்தது. குறிப்பாக வேலூர் மாநகரம் முழுவதும் மண், மணல், பிளாஸ்டிக் பேப்பர்கள், குப்பைகள் நாலாபுறம் காற்றில் பறந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து 5 மணியளவில் வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சத்துவாச்சாரி, காட்பாடி, தொரப்பாடி போன்ற இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சத்துவாச்சாரி பேஸ்-4 ரங்காபுரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் 7 மரங்கள் வேரோடு வீடுகளின் மீது சாய்ந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. 4 மின்கம்பங்களும் உடைந்து விழுந்தது.
இதேபோல் பேஸ் 5 பகுதியில் ஒரு மின்கம்பமும், மின் வயர்களும் சேதம் அடைந்தது. 20க்கும் மேற்பட்ட மரங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே அமைக்கப்பட்டு இருந்த தகர ஷீட் ஷெட் ஒன்று காற்றில் பெயர்ந்து பறந்தது. மேலும் ரங்காபுரம் வனத்துறை அலுவலகம் பின்புறம் உயர் அழுத்த மின் வயர் அறுந்து விழுந்தது. இதேபோல் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்தது.
இதனால் சத்துவாச்சாரி, தொரப்பாடி போன்ற பகுதிகளில் மின்சப்ளை தடைபட்டது. உடனடியாக மின்சார ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
The post வேலூர், காட்பாடியில் மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை appeared first on Dinakaran.