×
Saravana Stores

சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூரில் வள்ளலார் தொடங்கிய சத்திய ஞானசபை சர்வதேச மையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வ தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தெய்வத்தமிழர் பேரவை தலைவர் மணியரசன் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். ஆனால் போலீசார் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், தடையை மீறி தெய்வத்தமிழ் பேரவை அமைப்பின் சார்பில் வடலூரில் நடைபெற இருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சத்தியபாமா அம்மையார் உள்ளிட்ட சுமார் 42 பேர் நேற்று சிதம்பரத்திற்கு வந்தனர். அவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து சித்சபை மீது ஏறி பாடுவதற்கு கீழ சன்னதி வழியாக சங்கு ஊதிக்கொண்டே கோயிலுக்குள் சென்றனர். அங்கிருந்த நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சித் சபையில் ஏறி சிவபுராணம் பாடினர். முடிவில் சித்சபையில் சங்கு ஊதினர்.

இதற்கு கோயில் தீட்சிதர்கள், இங்கு சங்கு ஊத கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து கனகசபையில் இருந்து கீழே இறங்கி வந்த சத்யபாமா அம்மையார், சிவனடியார்களுடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய சத்தியபாமா அம்மையார், ‘தீட்சிதர்கள் அராஜக போக்குடன் நடந்து கொண்டு வழிபாடு செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். சிவனடியார்கள் விரட்டப்படும் நிலை இந்த இடத்தில் உள்ளது. இந்த கோயில் நம் முன்னோர்கள் நமக்காக கட்டிய கோயில். அதனால் இந்த கோயிலை தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறை மீட்க வேண்டும்’ என்றார்.

நாம் தமிழர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைது
வள்ளலார் தொடங்கிய சத்திய ஞானசபை சர்வதேச மையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வடலூரில் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற சத்தியபாமா அம்மையார் உள்பட 42 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இதேபோல், வடலூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த அரியலூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருமானூரை சேர்ந்த கப்பல் குமார் மற்றும் நிர்வாகி நீல மகாலிங்கம் ஆகியோரை போலீசார் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கடலூர் செல்லங்குப்பத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன்(40), மகேஷ்குமார்(55), சாமிரவி(49), அன்பு தென்னரசு(60), ஜஸ்டின் பெனடிக்ராஜ்(46), சுஜின்(34), முத்துக்குமார்(37) ஆகிய 7 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடு முன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கடையநல்லூர் மலம்பாட்டை தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளரும், தென்காசி நாடாளுமன்ற வேட்பாளருமான இசை மதிவாணன் மற்றும் தென்காசி நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja temple ,Dikshitars ,Shiva ,Chitsabha ,Chidambaram ,Chitambaram Nataraja Temple ,Sathya Gnanasabha ,Vallalar ,Vadalur ,Dikshitar ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை...