சிவகங்கை, மே 5: சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எப்பயிர் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதுவே வருவாய் கிராமத்துக்கான பயிராக தேர்வு செய்யப்படுகிறது.
பின் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் அனைத்து விவசாயிகளும் பார்வையிடத்தக்க வகையில் சாலை ஓரங்களில் அமைந்துள்ள 10 முதல் 15 ஏக்கர் வரையிலான பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு குறிப்பிட்ட அந்த பயிருக்கான அனைத்து தொழில்நுட்பங்களும் கடைபிடிக்கும் வகையில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்பட உள்ளன.
மண் மாதிரி ஆய்வில் தொடங்கி உழவு விதைகள், நீர் மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் தொழில்நுட்பங்கள் விதைப்பு முதல் விளைச்சல் களத்துக்கு செல்லும் வரையில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் செயல் விளக்கத்திடல்களில் விவசாயிகளை கடை பிடிக்கச் செய்து அதன் மூலம் அத்திடல்களில் 15 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத்திடல்களில் அறுவடையின்போது அக்கிராம விவசாயிகளை பங்கு பெறச்செய்து வயல் விழாக்கள் நடத்தவும், அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள அனைத்து விசாயிகளும் இத்தொழில் நுட்பங்களை கையாண்டு ஒட்டுமொத்த கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட பயிரின் மகசூலை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதனால் இத்திட்டம் செயலாக்கம் தொடர்பாக வேளாண்மை துணை அலுவலர்கள் கிராமத்திற்கு வருகையில் அவர்களுடன் இணைந்து செயல்விளக்கத் திடல்களை தேர்வு செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்: வேளாண் இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.