×

ஊட்டியில் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

 

ஊட்டி, மே 5: பல மாதங்களுக்கு பின்னர் நேற்று ஊட்டியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கோடை மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டு வழக்கம் போல் தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்கியது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. வட கிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை.

இதனால், நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. ஆனால், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் குறைந்துக் கொண்டே சென்றது. போதிய மழை இல்லாத நிலையில், தேயிலை மகசூல் குறைந்தது மற்றும் மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

சமவெளி பகுதி போன்று நீலகிரியில் வெயில் வாட்டி வரும் நிலையில், அனைத்து குடியிருப்புகள், நிறுவனங்களில் பேன், ஏசி ஆகியவைகள் 24 மணி நேரமும் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், பெரும்பாலான நீர் மின் நிலையங்கள் இயக்கப்படாமல் உள்ளது.

மேலும், குடிநீர் ஆதாரங்களில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. மழை துவங்கியுள்ளதால், தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் மலர் செடிகளில் மலர்கள் பூக்க வாய்ப்புள்ளது.

நேற்று பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று பகல் நேரங்களில் மேக மூட்டம் மற்றும் மழையின் காரணாக ரம்மியமான காலநிலை நிலவியது. இதனால், ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து சென்றனர். அதேபோல், ஊட்டி நகரில் கிரீன்பீல்டு, மார்க்கெட், லோயர் பஜார், படகு இல்லம் சாலை போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

The post ஊட்டியில் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...