சென்னை: தமிழகம் முழுவதும் 2 லட்சம் பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்ற பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரம், மீட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் சரியாக கணக்கெடுக்க முடியவில்லை.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,25,632 மீட்டர்கள் பழுதாகி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவற்றை உடனே மாற்றுமாறு தமிழ்நாடு மின் வாரியம் தலைமைப் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை தெற்கு வட்டத்தில் அதிகபட்சமாக 36,343 மீட்டர்களில் குறைபாடு உள்ளது. உள்நாட்டு வணிகம் மற்றும் தொழில்துறை உட்பட 3.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதால் பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது தவிர்க்க முடியாதது.
இதற்கென வட மாநில நிறுவனத்திடம் டெண்டர் மூலம் மீட்டர்கள் வாங்கப்படுகிறது. தவிர தாமதம் ஏற்படுவதால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மீட்டர்களை வாங்குவதற்கு நுகர்வோர் இப்போது அனுமதிக்கப்படுகிறார்கள், அதன்படி அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
The post தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்த 2 லட்சம் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.