×

நெல்லை மாவட்ட தலைவர் மரணத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் சிறப்பு குழு விசாரணை; செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நேற்று காங்கிரசில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, டி.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய இழப்பு. தென் மாவட்டத்தில் வலிமையான ஒரு மாவட்ட தலைவரை நாங்கள் இழந்திருக்கிறோம். நாளை(இன்று) காலை 9 மணிக்கு மேல் உடல் அடக்கம் செய்வதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதில் கலந்து கொள்ள நெல்லை செல்கிறேன். காவல்துறையினர் விசாரணையை நேர்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயக்குமார் குடும்பத்தினரின் புகாரை ஏற்று நேர்மையான முறையில், எந்தவித ஐயமும் வராத வகையில் விசாரணை மேற்கொள்ள சொல்லி இருக்கிறோம். மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனையை ஒளிப்பதிவு செய்ய சொல்லி இருக்கிறோம். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் அதனை முன் நின்று கவனித்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் ஒரு சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்துவோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்திருகிறோம். இதைப் பற்றி பேசுவதற்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை யார்?. நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதற்கான நடவடிக்கையை எடுக்க எங்களுக்கு தெரியும்.

The post நெல்லை மாவட்ட தலைவர் மரணத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் சிறப்பு குழு விசாரணை; செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Congress ,Selvaperundhai ,CHENNAI ,AIADMK ,BJP ,BAM ,DMD ,Nam Tamilar ,Krishnagiri district ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,Satyamurthy ,Bhavan ,treasurer ,Ruby Manokaran ,vice-presidents ,Gopanna ,Nellai district ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்...