×
Saravana Stores

இன்று வணிகர் தினத்திற்காக விடுமுறை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள் ஆகியவை வருகிறது. மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகராஷ்ட்ரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

அனைத்து வகையான காய்கறிகளும் ஒரே இடத்தில் பசுமையாக கிடைப்பதால், பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், மதுரையில் இன்று வணிகர் தின மாநாடு நடைபெறுவதையொட்டி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்களும், சில்லரை விற்பனை வியாபாரிகளும் குவிந்தனர்.

இந்நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ வெங்காயம் ரூ.20- ரூ.30க்கும், நவீன் தக்காளி ரூ.20-ரூ.40, பீன்ஸ் ரூ.50-ரூ.180, பீட்ரூட் ரூ.25-ரூ.50, முள்ளங்கி ரூ.15-ரூ.30, சவ்சவ் ரூ.30-ரூ.50, முட்டைகோஸ் ரூ.15-ரூ.30, வெண்டைக்காய் ரூ.20-ரூ.40, கத்திரிக்காய் ரூ.10-ரூ.30, காராமணி ரூ.15-ரூ.30, புடலங்காய் ரூ.15-ரூ.40, பச்சை மிளகாய் ரூ.50-ரூ.100, எலுமிச்சை ரூ.100-ரூ.150, பட்டாணி ரூ.80-ரூ.150 என விலை உயர்ந்தது.

மேலும், சுரைக்காய், சேனைக்கிழங்கு, முருங்கைக்காய், சேம்பு, வெள்ளரிக்காய், அவரை, பீரக்கன், நூக்கல், கோவைக்காய், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளும் ரூ.20 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து விற்கப்பட்டது. மார்க்கெட் இன்று விடுமுறை என்பதால்அனைத்து காய்கறிகளின் விலையும் நேற்று உயர்ந்ததால் சமையலுக்கு அவசியத் தேவையான தக்காளி, வெங்காயம், மற்றும் விலை சற்று குறைந்த காய்கறிகளை மட்டும் வாங்கிச் செல்கிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post இன்று வணிகர் தினத்திற்காக விடுமுறை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Trader's Day ,Coimpede ,Chennai ,Merchant's Day ,Coimbed market ,Chennai Coimbed Vegetable Market ,Tamil Nadu ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது