சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த விமானம் 6 மணி நேரம் தாமதமானதால் 600 பயணிகள் கடும் அவதிப்பட்டனர். லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 5.35 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். லண்டன்- சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவையாக, இந்த ஒரு விமானம் இயக்கப்படுவதால் விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதேபோல், நேற்று காலை சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 314 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். ஆனால், அந்த விமானம் லண்டனில் இருந்து தாமதமாக புறப்பட்டதால், சென்னைக்கு சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் இணையதளம் மூலம் தகவல்களை அனுப்பியது.
ஆனாலும் தகவல் கிடைக்காத பயணிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து, இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். அவர்களிடம் விமானம் 6 மணி நேரம் தாமதம் என்ற தகவலை கூறியதும், பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு தாங்கள் வெளியூர்களில் இருந்து புறப்பட்டு, வந்து விட்டோம். இனிமேல் 6 மணி நேரம் எங்கு போய் தங்கி இருப்போம் என்று கேட்டு, விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், அந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு வசதிகளையும் செய்து கொடுத்தது. லண்டனில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய அந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.30 மணிக்கு வந்தது.
அந்த விமானத்தில் லண்டனில் இருந்து சுமார் 294 பயணிகள் வந்தனர். அவர்களும் 6 மணி நேரம் தாமதத்தால் மிகுந்த அவதிப்பட்டனர். பிறகு அந்த விமானம் சென்னையில் இருந்து லண்டனுக்கு வழக்கமாக காலை 5.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நேற்று காலை 11.30 மணியளவில் லண்டன் புறப்பட்டு சென்றது. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டனில் இருந்து சென்னை வந்த பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் சுமார் 600க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
The post லண்டன் – சென்னை – லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதம்: 600 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.