- தேவகாவுடா
- Revanna
- கர்நாடகா சிறப்பு விசாரணைக் குழு செயல்
- பெங்களூர்
- முன்னாள்
- அமைச்சர்
- எல்.
- வூமா எச். டி. ரேவன்னா
- சிறப்பு விசாரணை குழு
- பிரஜ்வால் ரேவன்னா
- கர்நாடகா சிறப்பு விசாரணைக் குழு
- தின மலர்
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் சிறப்பு புலனாய்வுக்குழு, ரேவண்ணாவை நேற்று கைது செய்துள்ளது கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா 300 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் தேவகவுடா மகன் ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், அதன்பின்னர் பல பெண்கள் தங்களை கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்ததாக தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர்.
வெளிநாட்டிற்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்.ஐ.டி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் பிரஜ்வல் இந்தியாவிற்குள் நுழைந்ததும், அவரை கைது செய்யும் விதமாக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டில் இருக்கும் அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் வகையில், அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு எஸ்.ஐ.டி கோரிக்கை விடுத்துள்ளது.
அவருக்கு எதிராக சிபிஐ விரைவில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கும் என்றும் அப்படி அளித்தால் உடனடியாக பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவார் என்றும் முதல்வரிடம் எஸ்.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட ரேவண்ணா வீட்டு பணிப்பெண் கடத்தப்பட்ட வழக்கில் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் ஏப்ரல் 26ம் தேதி நடந்த தேர்தலுக்கு, 3 நாள் முன்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி அழைத்து வரச்சொன்னதாக கூறி தனது தாயை சதீஷ் போபண்ணா என்பவர் அழைத்துச்சென்று, பின்னர் தேர்தல் முடிந்ததும் கொண்டுவந்து வீட்டில் விட்டதாகவும், அதன்பின்னர் கடந்த 29ம் தேதி மீண்டும் தன் தாயை அவர் கடத்தி சென்றதாகவும், பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணின் மகன் புகார் அளித்திருந்தார்.
மேலும்,’என் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் நானும் மாட்டிக்கொள்வேன் என்றும் மிரட்டி என் தாயை அழைத்து சென்றார்கள். ஆனால் என் தாயை பிரஜ்வல் ரேவண்ணா மானபங்கப்படுத்தியது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. அதன்பின்னர் தான் என் தாய் கடத்தப்பட்டிருப்பதை தெரிந்துகொண்டேன்’ என்று புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் அந்த பெண்ணை கடத்திச்சென்ற சதீஷ் போபண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் முன்பே கைது செய்துவிட்டனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ரேவண்ணா, முன் ஜாமீன் கேட்டு பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பெண் கடத்தல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சதீஷ் போபண்ணா கைது செய்யப்பட்ட நிலையில், முதல் குற்றவாளியான ரேவண்ணாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன்ன பட், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மே 6ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் வீட்டில் சோதனை நடத்திய எஸ்.ஐ.டி அதிகாரிகள், அங்கு இருந்த ரேவண்ணாவை கைது செய்தனர். தேவகவுடா வீட்டிற்கு எஸ்.ஐ.டி அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது, சுமார் 15 நிமிடத்திற்கு தேவகவுடா வீட்டு கதவு திறக்கப்படவில்லை. ஆனாலும் எஸ்.ஐ.டி அதிகாரிகள் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து 15 நிமிடத்திற்கு பின் கதவு திறக்கப்பட்டதும், தேவகவுடா வீட்டிற்குள் சென்று சோதனை செய்த எஸ்.ஐ.டி அதிகாரிகள், அங்கு இருந்த ரேவண்ணாவை கைது செய்தனர்.
ரேவண்ணா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் மே 6ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்த அதேவேளையில், ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நிலையில், ரேவண்ணாவும் வெளிநாட்டிற்கு தப்பியோட திட்டமிட்டிருந்ததால் அவருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எஸ்.ஐ.டி ஏற்கனவே ஆஜராக ரேவண்ணாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகாததால், நேற்று மாலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41ஏ-வின் கீழ் எஸ்.ஐ.டி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நேற்று மாலையும் அவர் ஆஜராகாததால், எஸ்.ஐ.டி அதிகாரிகள் தேவகவுடாவின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக ரேவண்ணாவை கைது செய்தனர். முன்னாள் பிரதமரின் மகன் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* கடத்தப்பட்ட பெண் பண்ணை வீட்டில் மீட்பு
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பணிப்பெண் கடத்தப்பட்டது தொடர்பாக அந்த பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ.டி அதிகாரிகள் அந்த பெண்ணை தீவிரமாக தேடிவந்தனர். ஹொலெநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டில் எஸ்.ஐ.டி சோதனை நடத்தியது. பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்த 3 பெண்களை ரேவண்ணாவின் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கு வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு அறைக்கும் சென்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரித்தனர். மேலும், ரேவண்ணாவுடன் தொடர்புடைய அனைவரது வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளிலும் எஸ்.ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு ஊரக மாவட்டம் ஹாலேனஹள்ளியில் உள்ள ரேவண்ணாவின் உதவியாளருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், கடத்தப்பட்ட அந்த பெண் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறார். எஸ்.ஐ.டி அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தபோது, அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி அதிகாரிகள், அதன்பின்னர் தான் ரேவண்ணாவை கைது செய்தனர். போலீசார் நடத்தும் முழு விசாரணையில் தான் அவர் கடத்தப்பட்டரா என்று தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
The post பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.