×
Saravana Stores

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

திமுக அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் ஊக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை:

திமுக அரசால் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20-09-2023-ல் முதலமைச்சரால் வெளியிடப்பட்டது. 2021-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஐ எட்டியுள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021- ம் ஆண்டில் 966 ஆக இருந்தது, தற்போது மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே திமுக அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

புத்தொழில் ஆதார நிதி:

தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஆதார நிதியாகத் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் காப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் அரசு பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 132 நிறுவனங்களுக்கு ரூ. 13.95 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக ஆதார நிதி உதவி பெற்ற புத்தொழில் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டு நிதியங்களின் மூலம் ரூ.314.30 கோடி ரூபாய் முதலீடுகளைத் திரட்டியுள்ளன.

தமிழ்நாடு பட்டியலினத்தவர்/பழங்குடியினர் புத்தொழில் நிதி:

அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்திவரும் திமுக அரசு பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ. 30 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கியதோடு, அடுத்த நிதி ஆண்டில் (2023-24) இத்தொகையை ரூ. 50 கோடியாக உயர்த்தியது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 38 நிறுவனங்களுக்கு ரூ. 55.20 கோடி பங்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டது.

வேலைவாய்ப்புகள்:

அரசின் நேரடி முதலீடு பெற்ற புத்தொழில் நிறுவனங்களின் வாயிலாக மொத்தம் 1913 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முதலீட்டாளர் இணைப்பு:

முதலீடுகள் தேவைப்படும் புத்தொழில் நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் நோக்கத்தில் முதலீட்டாளர் இணைப்புத் தளம் (TANFUND) முதலமைச்சரால் உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ல் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 230 துணிகர முதலீட்டு நிறுவனங்களும், 3,389 புத்தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துள்ளனர்.

இத்தளத்தின் வாயிலாக 714 புத்தொழில் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைக்கும் வகையில் முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

வழிகாட்டி மென்பொருள் (Mentor Software)

புத்தொழில் நிறுவனங்களுக்குத் தகுந்த வழிகாட்டுதலை அளிக்கும் நோக்கில் வழிகாட்டி தளம் Mentor TN தொடங்கப்பட்டுள்ளது. இதில் 257 துறைசார் வல்லுநர்கள் வழிகாட்டுநர்களாக இணைந்துள்ளனர். 669 புத்தொழில் நிறுவனங்கள் இதில் பதிவுசெய்துள்ளன. இத்தளத்தின் மூலம் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் இடையேயான இணைய/நேரடி சந்திப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பிராண்ட்லேப் & லாஞ்ச்பேட் (BrandLabs & LaunchPad)

தனித்த வணிக அடையாளங்களை உருவாக்குவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் தேவையான நுட்பங்களைக் கற்றுத்தரும் பயிற்சி வகுப்பு நில்-பிராண்ட் செல் எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளுக்கென 250 நிமிட காணொளி (ஆங்கிலம், தமிழ் மொழியில் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

பிராண்ட்லேப், லாஞ்ச்பேட் எனும் சிறப்பு முன்னெடுப்புகள் வாயிலாக புத்தொழில் நிறுவனங்களின் 248 தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 52 தயாரிப்புகள் மகளிரால் தயாரிக்கப்பட்டவையாகும்.

ஸ்டார்ட்அப் திருவிழா (Startup Thiruvizha)

புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய தமிழ்நாடு புத்தொழில் திருவிழா 2023 மாபெரும் வெற்றி கண்டது. 21 ஆயிரம் பார்வையாளர்களோடு, 450 புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற கண்காட்சி அரங்கமும் இத்திருவிழாவில் இடம்பெற்றது. இந்த விழாவில் 3 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வட்டார புத்தொழில் மையங்கள்:

புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பெரு நகரங்களைத் தாண்டி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 ஆண்டுகளில் மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 7 நகரங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சிகளின் மூலம் சுமார் 5,393 புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன.

ஸ்டார்ட்அப் டிஎன் ஸ்மார்ட் கார்டு:

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து பொருள், சேவைகளை சலுகை அடிப்படையில் ஸ்டார்ட்அப்கள் பெற முடியும். இதுவரை 137 நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் கார்டை பெற்று பயனடைந்து வருகின்றன.

தகவல் மையம்:

24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தொழில் முனைவோர்களுக்கு அனைத்துத் தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

புத்தாக்கத் தொழில்களுக்கு நிதி உதவி எளிதாகக் கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் முயற்சியால் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, டிபிஎஸ் வங்கி, பெடரல் வங்கி, யெஸ் வங்கி, யுகோ வங்கி ஆகிய வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

தொழில் வளர் காப்பகங்களின் திறன் மேம்பாடு:

புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதாரமாகத் திகழும் தொழில் வளர் காப்பகங்களின் திறன் மேம்பாட்டுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2023-24-ம் நிதி ஆண்டில் சிறப்பாகச் செயல்படும் தொழில் வளர் காப்பகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ. 5 லட்சம் வீதம் 15 தொழில் வளர் காப்பகங்கள் (Incubators) ரூ. 75 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அத்துடன் 10 தொழில் வளர் காப்பகங்களின் நிர்வாகிகள் இஸ்ரேல், சிங்கப்பூர் நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள சிறந்த செயல்பாடுகளை அறிந்துவர வழி செய்யப்பட்டது.

உலகளாவிய புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம்:

பன்னாட்டு அளவில் தடம் பதிக்கும் நோக்கில் துபாயில் புதிதாக புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துபாய் சென்று அங்குள்ள வாய்ப்புகளைப் பெறவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மையத்தில் இதற்கென சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் குறிக்கோளை எட்ட புத்தொழில் துறை வளர்ச்சி ஒரு சாதனைக் குறியீடாகத் திகழ்கிறது.

புத்தொழில் பதித்துவரும் வெற்றியைத் தக்கவைக்கும் நோக்கோடு உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணிப் புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,DMK ,M.K.Stalin. ,Tamil Nadu government ,DMK government ,Dinakaran ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...