சென்னை: கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை விடுமுறை அறிவித்த நிலையில், அரசின் உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிசாமி ஆகியோர் இணைந்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது இயக்குனர் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இம்மாதம் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டிருந்தன. இந்த சூழலில் தான் பள்ளிக்கல்வித்துறையின் அறிவிக்கை வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.