×
Saravana Stores

அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்

*வறட்சியை தாங்க கூடியது

திருமயம் : அரிமளம், திருமயம் பகுதிகளில் வறட்சியை தாங்க கூடிய தைல மரங்கள் கருகி வருகிறது.தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பருவமழை காலம் தவறி பெய்து வருகிறது. இதில் அவ்வாறு பெய்யும் மழையும் ஒரு சில பகுதிகளில் அதிகமாகவும் ஒரு சில பகுதிகளில் மிக குறைவாகவும் பெய்கிறது. இதனால் கடந்த பருவ காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து மாவட்டம் முழுவதும் வெள்ள நீர் பாய்ந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் சேதம் அடைந்த போதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கன மழை அளவு பதிவாகவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியான அரிமளம், திருமயம் பகுதிகளில் கடந்த வடகிழக்கு பருவமழை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் பருவ மழையை நம்பி சம்பா நடவு செய்த விவசாயிகள் நடவு செய்த பயிர்களை காப்பாற்ற நிலத்தடிநீரை பயன்படுத்தி அறுவடை செய்தனர். இதனிடையே அரிமளம், திருமயம் பகுதிகளில் தெற்கு வெள்ளாறு, பாம்பாறு என்ற இரண்டு சிறிய ஆறுகள் மட்டுமே பாய்கிறது. இந்த ஆறுகளில் இருந்து வரும் நீரை விவசாயிகள் கண்மாய்களில் தேக்கி வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

அதேசமயம் பெரும்பாலான கிராம மக்கள், மழை நீரை கண்மாய்களில் தேக்கி வைத்து நீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனிடையே கடந்தாண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் விவசாயிகள் பருவமழையை நம்பி விவசாயம் செய்யாமல் நிலத்தடி நீரை பயன்படுத்த தொடங்கினர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

கிணறு பாசனம் மூலம் விவசாயம் செய்த விவசாயிகள் கிணற்றில் நீரூற்று இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு போனது.அதேசமயம் அரிமளம், திருமயம் பகுதிகளில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வனத்துறை சார்பில் தைல மரம் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சி வறட்சி காலங்களில் வறட்சியை தாங்கும் மரம் என்பதால் வனத்துறையினர் தைல மரத்தினை நடவு செய்து வளர்த்து வருகின்றனர்.

இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் தைல மரங்களால் நிலத்தடி நீர் குறைந்ததாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இதனிடையே தற்போது அரிமளம், திருமயம் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வறட்சியை தாங்கி வளரக்கூடிய தைல மரங்கள் கருகி வருகிறது. இதுபோன்று தைல மரங்கள் கருகி வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அரிமளம், திருமயம் பகுதியில் தைல மரம் கருகுவது நிலத்தடி நீர் குறைந்ததற்கான அறிகுறி என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

The post அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள் appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Thirumayam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...