பேரணாம்பட்டு, மே 4: பேரணாம்பட்டு அருகே பைக் விபத்தில் பலியான கூலித்தொழிலாளி சடலத்துடன் அவரது உறவினர்கள், இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 2 பைக்குகள் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில் பல்லலகுப்பம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார்(33) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேல்பட்டி போலீசார் சிவக்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று சிவக்குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிவக்குமாரின் சடலத்துடன் பேரணாம்பட்டு- மேல்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி, டிஎஸ்பி ரவிச்சந்திரன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், விபத்தில் உயிரிழந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், விபத்துக்கு காரணமான திலிப்குமார்(38) என்பவரை மேல்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் குப்பன் நேற்று கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
The post இழப்பீடு கேட்டு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம் பேரணாம்பட்டு அருகே பைக் விபத்தில் கூலித்தொழிலாளி பலி appeared first on Dinakaran.