விழுப்புரம், மே 4: விழுப்புரம் தனி மக்களவை தொகுதியில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் சிசிடிவி கேமிராக 20 நிமிடம் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு துணை ராணுவம், ஆயுதப்படை உள்ளிட்ட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த அறையை சுற்றிலும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டு வேட்பாளர்கள், அவர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை வாக்கு பதிவு அறையில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் 20 நிமிடம் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. கணினியில் உள்ள யூபிஎஸ்சில் பழுது காரணமாக இந்த கேமிரா இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஊழியர்கள் அதனை விரைந்து சீரமைத்த பின் கேமிராக்கள் இயங்க தொடங்கியது. இதனிடையே இந்த தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் எம்பி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பழனியிடம் மனு அளித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைகளில் நேற்று காலை 9.28 மணி அளவில் திடீரென்று கண்காணிப்புக் கேமிராக்கள் நின்று விட்டன என்றும் அவை சரி செய்யப்பட்டு 9.58 மணி அளவில் மீண்டும் இயங்க தொடங்கின. தேர்தல் நடத்தும் அதிகாரி விரைந்து வந்து கேமிரா வைக்கப்பட்டுள்ள அறைகளையும் மின்னிணைப்பு சம்பந்தமான அதிகாரியையும் நேரில் வரவழைத்து, கவனத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் விசிக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் அங்கு நியமிக்கப்பட்டிருந்தவர்களை அழைத்துக் கொண்டு 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்வையிட்டதோடு அங்கு இருக்கும் பதிவேடுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி, எஸ்பியும் கையெழுத்திட்டனர் எனவும் விசிக பிரமுகர் அய்யப்பன் என்னிடம் தெரிவித்தார். இந்த விவரங்களை விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் பொன்முடியிடமும் தெரிவித்தேன், என்றார்.
உடனடியாக பழுது சரிசெய்யப்பட்டது – ஆட்சியர்
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விழுப்புரம் தனி தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் ஆகியவை மூன்றடுக்கு பாதுகாப்புடன் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9.30 மணியளவில் யூபிஎஸ்சில் ஏற்பட்ட பழுது காரணமாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்சாதனங்களில் தடை ஏற்பட்டது. இந்த பழுதை அதிகாரிகள் மற்றும் விசிக, அதிமுக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விழுப்புரம் மக்களவை தொகுதி வாக்கு பதிவு இயந்திர அறையில் 20 நிமிடம் இயங்காத சிசிடிவி கேமரா யூபிஎஸ்சில் பியூஸ் போனதால் மின்தடை appeared first on Dinakaran.