புதுடெல்லி: அரசியல் கட்சி தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரியை மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் ஒரு தொகுதியில் ஒரே பெயரை கொண்ட பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல், யாருக்கு வாக்களிக்கிறோம் என்று வாக்காளர்களுக்கும் சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “தேர்தலில் ஒரே பெயரில் பலர் டம்மி வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்களில் இருப்பவர்கள்தான் திட்டமிட்டு டம்மி வேட்பாளர்களாக களம் இறக்கப்படுகிறனர். இது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைமுறையை பாதிக்கிறது. எனவே இதனை தடுக்கும் விதமாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘பெற்றோர்கள் ஒரே மாதிரியான பெயர்களை வைத்து இருப்பார்கள். அதற்காக அவர்களுக்கு வேட்பாளர்களாகும் தகுதி இல்லை என்று எப்படி கூற முடியும். மேலும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் எப்படி தடுக்க முடியும். உதாரணத்துக்கு ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற பெயர்கள் இருப்பது போன்று ஆகும். எனவே இந்த மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை” என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.