சிவகங்கை, மே 4: குறைந்த நீர் தேவையுள்ள எள் பயிரிட்டு விவசாயிகள் லாபம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கேடையில் மழை குறைவாக இருப்பதால் குறைந்த நீர் தேவை உள்ள மற்றும் குறைந்த செலவில் எள் பயிரிட்டு லாபம் பெறலாம். இதற்கான சிறப்பு திட்டம் 50 எக்டேரில் செயல்படுத்தப்படுகிறது. எள் சாகுபடி காலம் 85 நாட்கள் ஆகும்.
குறைந்த நீரில் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிராகும். ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை அளவே போதுமானது. எள் அனைத்து வகையான மண்ணிலும் நன்றாக வளரும். சித்திரை மாதத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து, மண்ணை நன்கு கலைத்து விடவேண்டும். விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உயிர் பூஞ்சான கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் என்ற விகிதத்தில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைகள் மிகவும் லேசாக இருப்பதால், மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். சலித்து சுத்தமான மணலை விதையின் அளவுக்கு சம அளவு கலந்து, சீராக நிலத்தில் தூவ வேண்டும். 15ம் நாள் 15 செ.மீ இடைவெளி வைத்து செடியை கலைத்து விட வேண்டும். விதைத்த 30வது நாள் 30 செ.மீ இடைவெளி வைத்து மீண்டும் ஒருமுறை செடியை கலைத்து விட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் அதிக கிளைகள் வெடித்து அதிக காய்கள் பிடிக்கும். அதிக பட்சமாக ஒரு செடியில் 100காய்கள் வரை வர வாய்ப்பு உள்ளது. விதைத்து ஒரு முறையும், வாரம் ஒரு முறையும், பூக்கும் தருணம் ஒரு முறையும், காய் பருவத்தில் ஒரு முறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மேற்கண்ட தொழில் நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம் appeared first on Dinakaran.