புனே: அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள், அதிக ஜிஎஸ்டியால் வாகன துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என ராஜீவ் பஜாஜ் கூறினார். பஜாஜ் நிறுவனத்தின் பல்சார் என்எஸ் 400 அறிமுக நிகழ்ச்சி புனேயில் நேற்று நடந்தது. இதில், பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் பேசியதாவது: ஒன்றிய அரசின் விதிமுறைகள் காரணமாக வாகனத்தின் விலை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பிஎஸ்6 மற்றும் ஏபிஎஸ் தொடர்பான ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியதால், கடந்த சில ஆண்டுகளாகவே வாகன விலை உயர்ந்து வருகிறது. பிஎஸ் 6 மற்றும் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு பல்சார் 150 பைக் ஷோரூம் விலை ரூ.71,000 ஆக இருந்தது. தற்போது அதே பைக் ரூ.1.5 லட்சம் ஆகி விட்டது. அதிக வரிவிதிப்பு மற்றும் அளவுக்கு அதிகமான ஒழுங்குமுறைகளை அமல்படுத்தியதன் மூலம், வாகனங்களின் விலை அவசியம் இல்லாமலேயே அதிகரித்து விட்டது.
இந்தியாவில், பெருநகரங்கள் அல்லாமல் மற்ற இடங்களில் வசிக்கும் சாமானிய மக்களும் அதிக ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். நாங்கள் ஏன் 28 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும்? ஆசியான் நாடுகள், லத்தீன் அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் 8-14 சதவீத ஜிஎஸ்டிதான் விதிக்கிறார்கள். இந்தியாவில் ஜிஎஸ்டி மிகவும் அதிகமாக உள்ளது. 18 சதவீத ஜிஎஸ்டி யை நிர்ணயிக்கலாம். அரசு இது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். 28 சதவீத வரி கூடவே கூடாது. இந்தியாவில் 12 முதல் 14 குதிரைத்திறனை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய 150 சிசி மோட்டார் சைக்கிளுக்கு கூட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது நியாயமா? டூவீலர்கள் விற்பனை கொரோனா காலத்துக்கு முந்தைய அளவை இன்னும் எட்டவில்லை. இவ்வாறு ராஜீவ் பஜாஜ் பேசினார்.
The post கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம் appeared first on Dinakaran.