திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே ஷிகெல்லா நோய் பாதித்து 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். அவரது மகள் அவந்திகா (8). அருகில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து அடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சிறுமியை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவந்திகா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். ஷிகெல்லா நோய் பாதித்தது தான் மரணத்திற்கு காரணம் என்று கோட்டயம் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. அசுத்தமான குடிநீர் மூலம் தான் இந்த பாக்டீரியா உடலில் பரவுகிறது. அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடம்பநாடு பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
The post பத்தனம்திட்டா அருகே ஷிகெல்லா நோய் பாதித்து சிறுமி பலி appeared first on Dinakaran.