×
Saravana Stores

வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

விருத்தாசலம்: வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார். ரயிலில் இருந்த அபாய சங்கிலி வேலை செய்யாததால் 2 பெட்டிகளை கடந்து சென்று 3வது பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அதற்குள் ரயில் சுமார் 8 கிலோ மீட்டர் கடந்து சென்றுவிட்டதால், கர்ப்பிணியை காப்பாற்ற முடியாமல் போனதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (25). இவரது மனைவி கஸ்தூரி (20). இவர்கள் சென்னை திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 11 மாதம் ஆன நிலையில் கஸ்தூரி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் இவருக்கு சொந்த ஊரில் வளைகாப்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்காக சொந்த ஊர் செல்ல நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து எஸ்-9 பெட்டியில் உறவினர்கள் 11 பேருடன் கஸ்தூரி புறப்பட்டு சென்றார்.

மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூரில் புறப்பட்ட ரயில் உளுந்தூர்பேட்டையை கடந்து பு.மாம்பாக்கம் பகுதியில் சென்றபோது கஸ்தூரிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ரயில் பெட்டியில் இருந்த கழிவறை சென்றபோது மூடப்பட்டிருந்தது. இதனால் படியின் ஓரமாக அமர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அருகில் அவரது கணவர் சுரேஷ் இருந்துள்ளார். வாந்தி எடுத்த பின் உள்ளே வர அங்கிருந்த கைப்பிடியை பிடித்தபோது திடீரென கை நழுவி கால் தடுமாறி படியிலிருந்து கஸ்தூரி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன கணவர் சுரேஷ் கத்தி கூச்சல் போட்டார். அலறியடித்து வந்த உறவினர்கள் கஸ்தூரி கீழே விழுந்ததை அறித்து அலறி அடித்து சத்தம் போட்டனர்.

தொடர்ந்து அந்த எஸ்-9 பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அது வேலை செய்யாததால் எஸ்-8 பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதுவும் வேலை செய்யவில்லை. இதனால் அவசர அவசரமாக எஸ்-10 பெட்டிக்கு சென்று அதில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து உள்ளனர். அதன் பின்பு பூவனூர் ரயில் நிலையம் அருகே ரயில் நின்றது. கஸ்தூரி கீழே விழுந்த இடத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தாண்டி ரயில் நின்றது. இதனால் சம்பவம் குறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் தலை, கை, கால் என அனைத்து பகுதிகளிலும் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கஸ்தூரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து திருச்சி ரயில்வே கோட்ட டிஎஸ்பி செந்தில்குமரன், விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதேபோல், திருமணமான 11 மாதத்தில் ரயிலில் இருந்து விழுந்து பெண் இறந்ததால் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் சையத் மெஹ்மூத் விசாரணை நடத்தினார்.

அப்போது, கஸ்தூரி உயிரிழப்புக்கு ரயிலில் இருந்த அபாய சங்கிலி வேலை செய்யாததுதான் முழு காரணம். அவர் விழுந்த உடன் அபாய சங்கிலியை இழுத்த போது ரயில் நின்றிருந்தால் எப்படியும் அவரை மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். 8 கிலோமீட்டர் சென்று ரயில் நின்றதால் சுமார் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய நிலையில் கஸ்தூரி இறந்துள்ளார். அபாய சங்கிலி ரயில் பெட்டியில் வேலை செய்யாததால் இந்த உயிரிழப்புக்கு ரயில்வே துறை நிர்வாகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அபாய சங்கிலி வேலை செய்யாதது குறித்து விரிவான விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு கஸ்தூரி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்கள் கதறி அழுதப்படி உடலை பெற்று கொண்டு சென்றது சோகத்தை ஏற்படுத்தியது.

* ஓடும் ரயிலில் இருந்து விழுந்து சென்னை வாலிபரும் மரணம்
சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட காகம்கரை-சாமல்பட்டி ரயில்ேவ ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம், ரயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று வாலிபரின் சடலத்ைத கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர், சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் 5வது தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஷ் (26) எனத்தெரியவந்தது. பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த விக்னேஷ், கடந்த 1ம் தேதி இரவு தனது நண்பர்கள் 2 பேருடன் கோவை ஈஷா யோகா மையத்திற்கு செல்ல தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரசில் முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் பயணித்துள்ளனர். சம்பவ இடத்தில் ரயில் வந்தபோது, கழிவறைக்கு செல்ல படிக்கட்டு அருகே விக்னேஷ் சென்றுள்ளார். அப்போது கால் தவறி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

The post வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Sogam Kollam Express ,Tenkasi ,Vridthachalam ,Express ,Dinakaran ,
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...