×
Saravana Stores

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது உயிரிழந்த காரைக்கால் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு

காரைக்கால்: ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது. காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இந்திய திபெத் எல்லைக் காவல் படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா – சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ராணுவ வீரர் பிரேம்குமார் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரேம்குமார் உடல் கடந்த 1ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊரான காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த போலகம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரர் பிரேம்குமாருக்கு புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், திருப்பட்டினம் நிரவி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன், காரைக்கால் துணை ஆட்சியர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்,முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை ராணுவ வீரர் பிரேம்குமாருக்கு குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிரேம்குமாரின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு செய்யப்பட்டு சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரேம்குமாரின் உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடியை, பிரேம்குமார் மனைவி செவ்வந்தியுடம் ராணுவ அதிகாரிகள் வழங்கினர். உயிரிழந்த பிரேம்குமாருக்கு 5 வயதில் கீர்த்தி என்ற ஆண் குழந்தை உள்ளார். மனைவி செல்வந்தி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த ராணுவ வீரருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று முன்னாள் ராணுவ வீரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

The post ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது உயிரிழந்த காரைக்கால் வீரர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: 24 குண்டுகள் முழங்க இறுதி சடங்கு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Jammu and Kashmir ,Premkumar ,Tirupatnam Polagam region ,Indian Tibet Border Patrol Force ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா...