×
Saravana Stores

துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு கூவம் ஆற்றில் இருந்த தூண்கள், கரையோர முட்புதர்கள் அகற்றம்: கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் முடியும்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தின் கட்டுமான பணிக்காக கூவம் ஆற்றிலிருந்த 17 தூண்கள் மற்றும் கரையோரங்களில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன.

கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது. இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம், இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி 20.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் மேம்பால சாலைத் திட்டம் ரூ.5800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைய உள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 2 அடுக்கு மேம்பால திட்டத்தில் துறைமுகம் – மதுரவாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தூண்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள 17 தூண்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் முழுவதும் இடித்து அகற்றப்பட உள்ளது. அதேபோல் புதிதாக கட்டப்படும் ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள், 13 வெளியேற்றம், நுழைவு பாதைகள் அமைய உள்ளன.

இதற்காக சில இடங்களில் மண் பரிசோதனையும் முடிந்துள்ள நிலையில் ஆரம்பகட்ட பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொடங்கியுள்ளனர்.  அதன்படி, திட்டத்தை செயல்படுத்துவதற்காக சாலை நடுவே உள்ள மிக கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக கூவம் ஆற்றில் பாதியில் கட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட 17 தூண்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மேலும் இதன் கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பரில் நிறைவடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் மேம்பால திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது எழும்பூர், ஆயிரம்விளக்கு பகுதியில் கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள 17 தூண்களை இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சிந்தாதிரிப்பேட்டை முதல் நேப்பியர் பாலம் வரை கூவம் ஆற்றின் இருபுறமும் தூண்களை அமைப்பதற்கான முட்புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் தூண்கள் அமைய உள்ளதோ அந்த இடங்களில் குறியீடுகள் அமைக்கப்படுகிறது. மேலும் மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியுள்ளது.

அரும்பாக்கத்தில் 4800 சதுர மீட்டர் பரப்பளவுக்கு ரூபாய் 91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்க உள்ளது. அதேபோல் துறைமுகத்தில் கடற்படை நிலத்தில் உள்ள 64 வீடுகள் எடுக்கப்பட உள்ளது. அதற்கு மாறாக நந்தனத்தில் புதிய வீடுகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்படும். இதன் பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு கூவம் ஆற்றில் இருந்த தூண்கள், கரையோர முட்புதர்கள் அகற்றம்: கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் முடியும் appeared first on Dinakaran.

Tags : Coovam river ,Highways Department ,Koovam River ,Chennai Port ,Maduravayal ,Maduravayal… ,Dinakaran ,
× RELATED கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட...