சென்னை: தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் ரேசன் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் பதுக்களை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை வடக்கு இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் அம்பத்தூர், கொரட்டூர், பெரம்பூர், எண்ணூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாத இறுதி வரை 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
70 டன் ரேஷன் அரிசி, 360 லிட்டர் மண்ணெண்ணெய், 36 சிலிண்டர்கள், 540 கிலோ கோதுமை, துவரம் பருப்பு லாரியில் கடத்தப்பட்ட 2 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் ஆயில்கள் கைப்பற்றப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 121 ஆண்கள், 119 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் ரேஷன் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், டேங்கர் லாரியில் ஆயில்களை திருடி விற்பது, மானிய எரிவாயு சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் தயங்காமல் 1800 599 5950 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
The post ரேசன் பொருட்களை கடத்தி விற்க முயற்சி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 206 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.