சென்னை: ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது போல், போலியான பணம் பரிமாற்றம் அங்கீகாரங்களை காட்டி பொதுமக்களிடம் டெபாசிட் தொகை வசூலித்தால், சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள சில நிறுவனங்கள், தனி நபர்கள், ரிசர்வ் வங்கியின் பண வரவு அறிவிப்பு (கிரெடிட் அட்வைஸ்), கட்டண தொகை விடுவிப்பு உத்தரவு (பேமெண்ட் ரிலீஸ் ஆர்டர்), ஸ்விப்ட் டிரான்ஸ்மிஷன் சர்டிபிகேட், தொகை செலுத்த நினைவூட்டல் கடிதம் (பேமெண்ட் ரீமைண்டர் லெட்டர்) போன்ற போலியான பணப்பரிமாற்ற அங்கீகாரங்களை காட்டி பொதுமக்களிடம் இருந்து வைப்பு (டெபாசிட்) சேகரிப்பதில் ஈடுபடுவது இந்திய ரிசர்வ் வங்கியின் (வங்கி) கவனத்திற்கு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அத்தகைய உத்தரவுகளை வெளியிடாது என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலே உள்ள அத்தகைய நிறுவனங்கள், தனி நபர்களுடன் எவரேனும் பரிவர்த்தனை செய்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவரே பொறுப்பாவார். இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொள்கிறது. மேலும், நிறுவனங்கள், தனி நபர்கள் இதுபோன்ற ஆவணங்களை காண்பித்து வைப்பு சேகரித்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்கத்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்: இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை appeared first on Dinakaran.