சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காப்பீடு செய்து, பயிர் இழப்பீடு ஏற்பட்டு, கணக்கெடுத்த பிறகு, பயிர் காப்பீட்டு நிறுவனம் உரிய காலத்தில் காப்பீடு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது நியாயமில்லை. பயிர் காப்பீடு செய்தும், காப்பீடு தொகை கிடைக்காமல் அடுத்து நடைபெற வேண்டிய விவசாயத்துக்கு கடன் வாங்க தள்ளப்படுகிறார்கள். இப்படி தொடர்ந்து கடன் வாங்கி விவசாயம் செய்து, நஷ்டம் அடைந்து பாதிக்கப்படும் விவசாயிகள் ஏராளம்.
மேலும், காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு காப்பீடு தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும். அதை விடுத்து காலம் தாழ்த்துவதும், 6 மாத காலம் வரை காப்பீடு தொகையை கொடுக்காமல் இருப்பதும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயிர் காப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக பெற்றுத்தர அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
The post பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.