சென்னை: கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகமாக பாதிக்கும் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழைக் காலத்தில் தமிழகம் வரலாறு காணாத மழை வெள்ளத்தை சந்தித்தது போல் தற்போது வெயில் காலத்திலும் வரலாறு காணாத வெப்ப நிலையை எதிர்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து, தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாக காலை 8 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. அதேபோல் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை தினசரியாக பதிவாகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது அவ்வப்போது வெப்ப அலை பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், அதிக மழை பெய்யும் காலத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் கோடையில் தான் கால்நடைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. எனவே அவற்றின் பராமரிப்பில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப் போல கால்நடைகளையும் அதிகமாகப் பாதிக்கும். கால்நடைகளுக்கும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியால் உடலின் வெப்பம் அதிகரிக்கும்.
கோடைகாலங்களில் சூரிய கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் மண்டல வெப்பநிலை ஆகிய அனைத்தையும் பொறுத்தே கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதிகமான வெப்பக் காலங்களில் கால்நடைகள் உணவு உட்கொள்ளுதல், கால்நடைகளின் வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கும். கறவை மாடுகளில் கோடைகாலங்களில் பால் உற்பத்தி 20% குறையும். கால்நடைகள் சினைக்கு வரும் தன்மையும் பாதிக்கப்படும். சினை பிடித்தலும் 20% முதல் 30% வரை பாதிக்கப்படுகிறது.
வெயில் காலத்தில் உணவு உட்கொள்ளுதலும் பாதியாக குறையும், தண்ணீரை அதிகமாக உட்கொள்ளும். எருமை மாடுகளில் பசுக்களை விட வேர்வை நாளங்கள் குறைவாக உள்ளதால் எருமைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. எருமை மாட்டின் தோல் கருப்பாக இருப்பதால் சூரிய கதிர்வீச்சு அதிகமாக தாக்கும். எருமையின் சினைப் பருவகால அறிகுறிகள் முழுமையாக தென்படாது. பருவத்துக்கு வரும் காலமும் குறையும். ஆடுகளில் அதிகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத் திறன் குறையும்.
கோடையில் கோழிகள் உணவு உட்கொள்ளுதல் குறையும் வாய்ப்புகளும் அதிகம். கோழிகள் வெப்பத்தை தாங்க முடியாமல் வாய் வழியாக மூச்சுவிடும். இதனால் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும். முறையான பராமரிப்பு இல்லாமல் போனால் அதிகமான கோழிகள் இறப்பை சந்திக்கக் கூடும். வளர்ப்பு பன்றிகளில் வெயில் வெப்ப தாக்க நோய், தோல்புண், கருவுறுதல் குறைவு ஆகியவை ஏற்படும். நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் காளைகள் வெயில் காலத்தில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: வீடுகளில் வளர்க்கும் கால் நடைகளை கவனமாக பராமரிக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை வரை குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும். கால்நடைகளுக்கு கொட்டகை அமைக்கும் போது உட்கூரை உயரம் 13 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். வெயில் காலங்களில் கூரைக்கு மேல் வைக்கோல், ஓலை போன்றவற்றை போடுவது வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும். பகல் நேரங்களில் கால்நடைகளை மரத்தடி நிழலில் கட்டி வைக்கவேண்டும்.
கொட்டகைகள் தாழ்வாக மற்றும் காற்றோட்டம் இல்லாமல் அமைத்திருப்பவர்கள் அதிக வெப்ப காலங்களில், வெயிலின் தாக்கம் நேரடியாக கால்நடைகளை தாக்காத வண்ணம் வெளியில் கட்டுவது நல்லது. பசுந்தீவனங்களை அதிக அளவு கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். அடர் தீவனங்களை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வழங்குவதன் மூலம் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். இதன்மூலம் கறவை மாடுகள் எடுத்துக்கொள்ளும் தீவனத்தின் அளவு அதிகரிக்கும்.
கறவை மாடுகளுக்கு தீவனத்துடன் தாது உப்பு கலவை மற்றும் வைட்டமின் சத்துக்களை சேர்த்து வழங்கவேண்டும். வெயில் காலங்களில் பசுந்தீவன தட்டுப்பாடு இருப்பதால் சைலேஜ் போன்ற ஊறுகாய் புல் விற்பனைக்கு கிடைப்பதால் அதனை வாங்கி கறவை மாடுகளுக்கு கொடுக்கலாம். ஹைட்ரொபோனிக்ஸ் அல்லது மண்ணில்லா தாவரங்களை வீட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கலாம். இதன் மூலம் வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
* கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதியின்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும் கறவை மாடுகளை சுற்றி வட்டமிடுவதாலும் பாதிப்பு ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
* கழிவுகளை உடனுக்குடன் அகற்றி தொழுவங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* கறவை மாடுகள் மீது 2 அல்லது 3 முறை தண்ணீர் தெளிக்கலாம்.
* வெயில் அதிகமாக இருக்கும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.
* கறவை பசுக்களில் ஏற்படும் உடல் அயற்சியை தடுக்க வெப்பத்தின் அளவு குறைவாக உள்ள காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.
* கறவை எருமைகள் சினைப் பருவத்திற்கு வரும் அறிகுறி கோடையில் வெளிப்படையாக தெரியாது. இது ‘ஊமைப் பருவம்’ என்று அழைக்கப்படும்.
* கோடை காலத்தில் எருமைகளின் இனவிருத்தி திறனை அதிகரிக்க நிழலில் கட்டி பராமரிக்க வேண்டும்.
* குளங்கள் இருந்தால் தண்ணீரில் நீந்த விடலாம். வசதி இல்லாவிட்டால் கால்நடைகள் மீது நீரை தெளித்து வெப்பத்தை குறைக்கலாம்.
* எருமைகளை எப்போதும் கட்டி வைக்காமல் சுதந்திரமாக திரிய விட வேண்டும்.
* கோடை காலங்களில் இறைச்சி கோழிகளின் இறப்பு விகிதம் அதிகளவில் இருக்கும்.
* வெயில் காலங்களில் முட்டை கோழிக்கு 2.5 சதுர அடியும், இறைச்சிக் கோழிக்கு 15 சதுர அடியும் இடவசதி வேண்டும்.
* பக்கவாட்டில் சாக்குகளை தண்ணீரில் நனைத்து தொங்கவிட வேண்டும்.
The post கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.