×

சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் மர்ம நபர்கள்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், இந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்கள், ஓடுபாதையில் தரை இறங்குவதற்காக தாழ்வாக பறக்கும் போது, விமானத்தை நோக்கி லேசர் லைட் ஒளி அடிப்பது அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த லேசர் லைட் ஒளி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று மாறுபட்ட கலர்களில் அவ்வப்போது ஒளிரச் செய்யப்படுகிறது. இது விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது.

இந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. துபாய், சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானங்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், இந்த சம்பவங்கள் நடக்கின்றன.

அதிலும் தரையிறங்கும் விமானங்களை நோக்கி தான் இந்த லேசர் லைட் ஒளி பாய்ச்சப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்களுக்கு இந்த லேசர் லைட் ஒளி அபாயம் ஏற்படுவது கிடையாது. இந்த லேசர் லைட் ஒளி, பரங்கிமலை, நந்தம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் பகுதியில் இருந்தும் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வந்த லேசர் லைட் ஒளி, சென்னை சேப்பாக்கம் பகுதியில் இருந்து வந்ததாக தெரியவந்தது.

இந்த சமூக விரோத செயலை செய்யும் விஷமிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதையடுத்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா, சமூக வலைதளத்தில் இதுபற்றி குறிப்பிட்டு, சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சமுதாய பொது நலன் கருதி, விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிப்பவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனே சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கொடிய செயல்களை செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் மர்ம நபர்கள்: இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Airports Authority of India ,Chennai ,Indian Air Force ,Dinakaran ,
× RELATED மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமானங்களை இயக்க AAI ஒப்புதல்