- பர்மா பஜார்
- இளையங்குடி
- சென்னை
- சகுல் அமீடு
- அசுதீன் கான் தெரு, திருவல்லிகேனி
- பர்மா பஜார்
- தமீம்
- இளையங்குடி புதூர்
- தின மலர்
சென்னை: திருவல்லிக்கேணி அசுதீன் கான் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது (35), பர்மா பஜார் கடைகளுக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி கொடுக்கும் இடைத்தரகராக இருந்தார். இந்த நிலையில், குருவியாக செயல்படும் இளையாங்குடி புதூரை சேர்ந்த தமீம் என்பவர் சில வியாபாரிகளிடம் சாகுல் அமீதை அறிமுகம் செய்துள்ளார்.
அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி தர சாகுல் அமீதிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பொருட்களை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் பணம் கொடுத்த வியாபாரிகளான இப்ராஹிம், ரிஸ்வான், ரமீஸ், ராஜா, நவாஸ் கான் உள்ளிட்டோர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள சாகுல் அமீது வீட்டிற்கு சென்று, அவரது மனைவியிடம், ரூ.2 கோடி பணத்தை வாங்கி விட்டு உனது கணவர் ஏமாற்றிவிட்டார்.
அந்த பணத்தை திருப்பி தரவில்லை என்றால் நடப்பதே வேறு, என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சாகுல் அமீது மனைவி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இருதரப்பினரையும் போலீசார் கடந்த 27ம் தேதி காவல் நிலையத்திற்கு அழைத்து பேசி எழுதி வாங்கி அனுப்பினர்.
இந்நிலையில், இப்ராஹீம் தரப்பினர் நேற்று முன்தினம் சாகுல் அமீதை இளையாங்குடி பகுதிக்கு காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீண்டும் சாகுல் அமீது மனைவி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தப்பட்ட சாகுல் அமீதை மீட்க தனிப்படை போலீசார் இளையாங்குடி பகுதிக்கு விரைந்துள்ளனர்.
The post ரூ.2 கோடி கொடுக்கல் வாங்கல் தகராறு பர்மா பஜார் கடைகளுக்கு பொருள் வாங்கி தரும் இடைத்தரகர் கடத்தல்: இளையாங்குடிக்கு விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.