×
Saravana Stores

தமிழகத்தில் 6ம் தேதி வரை வெப்ப அலை: 5 நாட்களுக்கு கோடை மழை

சென்னை: தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும், 5 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பம் மற்றும் வெயில் அதிகரித்து வரும் நிலையில், 17 மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. அநேக மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டது.

இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, அதிகபட்சமாக கரூர், வேலூர், திருத்தணி, ஈரோடு மாவட்டங்களில் நேற்று (3ம்தேதி) 109 டிகிரி வெயில் கொளுத்தியது. திருப்பத்தூர் 108 டிகிரி, திருச்சி, மதுரை, சேலம் மாவட்டங்களில் 106 டிகிரி, நாமக்கல், சென்னை, த ர்மபுரி, பாளையங்கோட்டை 104 டிகிரி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் நிலவியது.

இதையடுத்து, அடுத்த சில நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என்றும், கோடை மழை பெய்யும் என்றும் சென்னை வ ானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: ஈரோடு, கரூர், பரமத்தி, திருத்தணி உள்ளிட்ட 10 இடங்களில் மே 2ம் தேதி, அதிகபட்ச வெப்பநிலை 108 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் 112 டிகிரி பதிவாகியுள்ளது.

இது இயல்பைவிட 7.5 டிகிரி செல்சியஸ் அதிகம். வெப்ப அலையை பொருத்தவரையில் வட உள் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள் பகுதிகளில் அதிகபட்சமாக 2 முதல் 4 டிகிரி செல்சியசும், வட உள் மாவட்டங்களில் 3-5 செல்சியஸ் வரை பதிவாகும். மே 6ம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.
கோடை மழையை பொருத்தவரையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழக மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கோடை மழை பெய்யக்கூடும். மே 7ம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி , திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. கோடை மழையை பொருத்தவரையில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரையில் 74 சதவீதம் இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது.

பருவமழை மாதிரி கோடை மழை இருக்காது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் காற்று அழுத்தம் நிலவும் போது காற்றின் மிதப்புத் தன்மையால் தான் கோடை மழைக்கு வாய்ப்பு ஏற்படும். கோடை மழை வரும் போது வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. மே மாதம் வெப்ப மாதம்தான். வெயில் நேரடியாக தரையில் விழுவதால் வெப்பம் அதிகரிக்கும். வெப்ப நிலை என்பது உள்ளூர் பகுதி மற்றும் மண்டல வானிலையை பொருத்துதான் அமையும். தற்போது சராசரியாக வட தமிழகப் பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ்க்கும் அதிமாக வெப்ப நிலை இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கரூரில் 4 நாட்களும், வெயில் அதிகரித்தது. 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரிக்கும் மேல் பதிவாகியுள்ளது. வெப்பநிலை என்பது இடத்தை பொருத்து மாறுபடும். ஏப்ரல் மாத்தில் சராசரி வெப்பநிலை என்பது கடலோர மாவட்டங்களில் 97 டிகிரியும், உள் மாவட்டங்களில் 108 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இயல்பில் இருந்து விலகல் (வேறுபாடு) என்று பார்க்கும் போது, உள் மாவட்டங்களில் 3-4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட இடம் என்று எடுத்துக் கொண்டால் ஊட்டியில் 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இவ்வாறு தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

* இன்று முதல் 25 நாள் கத்திரி வெயில்
தமிழகம் முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் தொடங்கும். தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கத்தரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை அதாவது 25 நாட்கள் தொடர்ந்து வெயில் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.

கத்தரி வெயில் காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அடிக்கும் ெவயிலையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் கத்திரி வெயில் வேறு தொடங்குவதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

The post தமிழகத்தில் 6ம் தேதி வரை வெப்ப அலை: 5 நாட்களுக்கு கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Heat wave in Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu ,Western Ghats ,Heat wave ,Tamil ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...