×
Saravana Stores

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார்

ரேபரேலி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியை தொடர்ந்து உபி மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அங்கு சோனியா, பிரியங்கா, கார்கேவுடன் ஊர்வலமாக சென்று நேற்று மனுத்தாக்கல் செய்தார். அமேதியில் கிஷோரி லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2019 மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாட்டில் வெற்றி பெற்ற ராகுல், அமேதி தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

2024 மக்களவை தேர்தலில் ராகுல் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக காங்கிரஸ் முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. அங்கு 2ம் கட்டமாக ஏப்.26ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் உபி மாநிலம் அமேதி மற்றும் சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதி வேட்பாளர் குறித்து காங்கிரஸ் எந்தவித முடிவும் அறிவிக்கவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக சோனியா தேர்வு செய்யப்பட்டதால் இந்த முறை ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியில் இருந்து ராகுல், பிரியங்கா போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு வரை இந்த இருதொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நேற்று ரேபரேலி மற்றும் அமேதியில் மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் நேற்று காலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் சோனியா காந்தி போட்டியிட்டு வென்ற ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அமேதி தொகுதியில் சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கிஷோரி லால் சர்மா நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து டெல்லியில் இருந்து தாயார் சோனியாவுடன் தனி விமானத்தில் புறப்பட்ட ராகுல்காந்தி நேற்று பர்சத்கஞ்ச் விமானநிலையத்திற்கு வந்தார். அங்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரியங்காகாந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். பின்னர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்ற ராகுல்காந்தி பிற்பகல் 2 மணி அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அமேதி தொகுதியைப்போல் ரேபரேலி தொகுதியும் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தொகுதி ஆகும். அங்கு ராகுல்காந்தி தாத்தாவும், இந்திராகாந்தி கணவருமான பெரோஸ் காந்தி, இந்திராகாந்தி, சோனியாகாந்தி ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அமேதி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷோரிலால் சர்மாவும் நேற்று சுமார் 50 ஆயிரம் தொண்டர்கள் புடைசூழ பிரமாண்ட ஊர்வலமாக சென்று மனுத்தாக்கல் செய்தார்.

இந்த 2 தொகுதிகளிலும் மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ரேபரேலியில் பா.ஜ வேட்பாளராக தினேஷ் பிரதாப்சிங் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் 2019ல் போட்டியிட்டு சோனியாவிடம் தோல்வி அடைந்தவர். அவருக்கு பா.ஜ மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. அமேதி பா.ஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அமேதி வேட்பாளருக்கு பிரியங்கா ஆதரவு
அமேதி அல்லது ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமேதி தொகுதி காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கிஷோரிலால் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரியங்கா காந்தி கூறுகையில்,’ நாங்கள் மீண்டும் உண்மை மற்றும் சேவை அரசியலைக் கொண்டுவர விரும்புகிறோம்.

பா.ஜ பண பலத்தின் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தில் போட்டியிடுவோம். இப்போது சேவை அரசியல் வேண்டும் என்று நாடு முழுவதும் ஒரு செய்தியை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிஷோரி லால் சர்மா அமேதி மற்றும் ரேபரேலியில் 40 ஆண்டுகளாக பணியாற்றியவர். கிஷோரிலாலுக்கு அமேதி தொகுதி, மக்கள் மற்றும் அப்பகுதியின் பிரச்சனைகள் பற்றி நன்றாகத் தெரியும்.

எங்கள் குடும்பம் கிஷோரி லால் சர்மாவுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. அவர் எப்போதும் அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கு சேவை செய்வதில் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளார். பொதுச் சேவையில் அவரது ஆர்வம் ஒரு எடுத்துக்காட்டு. அவரது விசுவாசமும், கடமையில் அர்ப்பணிப்பும் அவருக்கு இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றியைத் தரும்’ என்று கூறினார்.

* 25 ஆண்டுகளில் முதல்முறை அமேதியை விட்டு விலகிய காந்தி குடும்பம்
அமேதி தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி குடும்பத்தினர் போட்டியிடாமல் தற்போதுதான் விலகி உள்ளனர். 1967ல் அமேதி தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. அன்றிலிருந்து சுமார் 31 ஆண்டுகளாக காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அங்கிருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வருவது வழக்கம். கடந்த 2019 பொதுத் தேர்தலில் பாஜவின் ஸ்மிருதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்ததால் காங்கிரஸ் கோட்டை உடைந்தது.

இந்த முறை, ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் காந்தி குடும்பத்தின் நெருங்கிய உதவியாளரான கிஷோரி லால் சர்மா அமேதி மக்களவைத் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அமேதி தொகுதியில் கடந்த 1998ம் ஆண்டு ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளரான சதீஷ் சர்மா தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால் பாஜவின் சஞ்சய் சிங்கிடம் தோல்வியடைந்தார். அதன்பின் சோனியா காந்தி 1999 தேர்தலில் சஞ்சய்சிங்கை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அமேதியை மீண்டும் கைப்பற்றினார். 2004ல் சோனியா, தன் மகன் ராகுல் காந்திக்கு அமேதியை ஒதுக்கிவிட்டு ரேபரேலி தொகுதிக்கு மாறினார். 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றார். 2019ல் தோல்வி அடைந்தார்.

* அமேதி வேட்பாளர் கே.எல்.சர்மா யார்?
அமேதியில் போட்டியிடும் கிஷோரிலால் சர்மா, பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியின் பிரதிநிதியாக நீண்ட காலம் பணியாற்றினார். அதற்கு முன்பு கடந்த 1983ம் ஆண்டு ராஜீவ் காந்தியுடன் சென்ற சர்மா, சுமார் 40 ஆண்டுகள் ரேபரேலி, அமேதி மக்களிடம் நெருங்கி பழகியவர்.

அடிக்கடி அமேதி மற்றும் ரேபரேலிக்கு சென்று வரும் அவர் பீகார் மாநிலத்தின் பொறுப்பாளராகவும், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். தேர்தல் நிர்வாகத்தில் நிறைய அனுபவம் பெற்ற அவர், தற்போது அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

* ‘இன்னும் சில சதுரங்க நகர்வுகள் உள்ளன’
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இது ஒரு நீண்ட தேர்தல் செயல்முறை. இன்னும் சில சதுரங்க நகர்வுகள் உள்ளன. பிரியங்கா தேர்தலிலும் போட்டியிடவில்லை. அவர் எந்தவொரு தேர்தலில் போட்டியிட்டாலும் நாடாளுமன்றத்தை அடைய முடியும். ஆனால் தற்போது பிரசாரத்தின் போது மோடி கூறும் பொய்களை அம்பலப்படுத்தி வருகிறார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற செய்திக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் அரசியல் மற்றும் சதுரங்கத்தில் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் தனது நகர்வுகளை கவனமாக பரிசீலித்து வருகிறார். கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. ரேபரேலியில் ராகுல் போட்டியிடுவது ஒரு மரபு மட்டுமல்ல. ஒரு பொறுப்பு, கடமை இதில் உள்ளது. ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் போட்டியிடுவதுதான் ஸ்மிருதி இரானியின் ஒரே அடையாளம். இப்போது ஸ்மிருதி இரானி அந்த புகழையும் இழந்துவிட்டார்’என்று கூறினார்.

The post பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டி: பிரியங்கா போட்டியிடுவார் என கருதிய நிலையில் அமேதி தொகுதியில் கே.எல்.சர்மா நிற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Rekareilly ,Amethi ,Priyanka ,L. Sharma ,Rekareli ,Rakulganti ,Ubi state ,Kerala ,Wayanadu ,Sonia ,Karke ,Kishori Lal Sharma ,Congress ,Raybareli ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியில் பிரியங்கா...