நெல்லை: இயந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் குடும்ப உறவுகளில் கூட ஒருவர் மற்றவருக்கு சிறிய உதவி கூட செய்ய முடியாத நிலை தான் உள்ளது. ஆனால் மாணவி ஒருவர் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராகவி. இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி மையத்தில் பி.காம் படித்து வருகிறார். இவர் வள்ளியூர், பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவற்ற மற்றும் மனநலம் சரியில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார். அழுக்கு சட்டையுடனும், நீண்ட தாடி, முடியுடனும் அலைபவர்களுக்கு முடிதிருத்தி, சவரம் செய்கிறார். அவர்களுக்கு உடை மற்றும் உணவு கொடுத்தும் ஆதரித்து வருகிறார்.
மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் தனது சொந்த செலவில் சேர்த்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் சுற்றுவட்டாரங்களில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்து மாணவி ராகவி கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக ஆதரவற்றவர்களுக்கு சமூக சேவை செய்து வருகிறேன். நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் வளர்ந்ததால் எனக்கு அதன் அருமை தெரியும். எனது தந்தை கொத்தனார் வேலை பார்க்கிறார். படித்துக் கொண்டே குடும்பத்தினருடன் பொருட்கள் வாங்க செல்லும்போது பஸ் நிலையங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதைக் கண்டு அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் செய்து வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் எனது நண்பர்களும் உதவிகள் செய்து வருகின்றனர்’ என்றார்.
The post சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவருக்கு ஆதரவளிக்கும் மாணவி: நெல்லையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.