×
Saravana Stores

செங்கல்பட்டு அல்லானூர் அருகே இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் காப்பீட்டு பணத்திற்காக நண்பனை கொலை செய்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் பெண்ணுடையது என வெளியான அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே காப்பீடு பணத்திற்காக நண்பனை கொலை செய்த வழக்கில் விசாரிக்க  திருப்பங்கள் எழுந்துள்ளது. முதலில் சுரேஷ் என்பவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் விசாரணையில் டில்லி பாபு என்பவர் கொலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது.

கொலையை செய்தவர் இறந்ததாக கூறப்படும் சுரேஷ் என்பவர் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சுரேஷ் கொலை செய்து எரித்ததாக கூறப்பட்ட உடல் டி.என்.ஏ சோதனையில் பெண்ணுடையது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் மாதம் ஐயனாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள ஒரு குடிசை பகுதியில் உடல் முழுவதும் எறிந்த நிலையில் கிடந்ததாக தெரிவித்தனர்.

அதே நேரத்தில் அவருடைய நண்பரும் என்னூரை சேர்ந்த லாரி ஓட்டுநருமான டில்லி பாபு என்பவரும் காணாமல் போனார். இரண்டு வழக்குகளும் தனி தனியாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தனது மகனை காணவில்லை என்று அளித்த புகாரில் எந்த முன்னேற்றமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டில்லி பாபுவின் தாயார் லீலாவதி ஆட்கொணர்வு மனு ஒன்றை கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது டில்லி பாபுவின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அரக்கோணம் பகுதியில் டில்லி பாபுவின் நண்பர் சுரேஷ் செல்போன் நம்பர் செயல்பட்டு கொண்டிருப்பதை கண்டு பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. செங்கல்பட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் சுரேஷ் நண்பர்களுடன் காவல் துறையில் சிக்கினார்.

விசாரணை மேற்கொண்ட போது காப்பீடு பணத்திற்காக இறந்ததாக நாடகமாடியதாகவும் இன்சூரன்ஸ் பணம் ரூ.1 கோடியை பெறுவதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு காட்டுவதற்காக தனது நண்பன் டில்லி பாபுவை கொலை செய்து எரித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லி பாபுவின் உடலை வைத்து தன்னுடைய உடல் என காட்டி நாடகம் ஆடியதாகவும் இதனால் தலைமறைவாக இருந்ததாக சுரேஷ் வாக்கு மூலம் அளித்தார்.

மேலும் நண்பர்கள் மூலம் ரூ.1 கோடி பணத்தை பெற்று விடலாம் என்று நினைத்தபோது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டதால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் போனதாக கூறினார். போலீசார் டில்லி பாபு வழக்கை விசாரித்த போது சிக்கி கொண்டதாக தெரிவித்தார். இதை அடுத்து வழக்கில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டனர். எறிந்த நிலையில் கிடைக்கப்பெற்ற உடல் டில்லி பாபுவுடையது என சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இருப்பினும் ஆவணங்கள் அடிப்படையில் அதனை உறுதி செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனையை போலீசார் மேற்கொண்டனர். டெல்லி பாபு என நினைத்து மீட்கப்பட்ட உடல் ஆண் உடல் இல்லை பெண் உடல் என்பது பரிசோதனையில் தெரியவந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் அல்லானூர் பகுதியில் இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடிய சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனையே எரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகியது.

The post செங்கல்பட்டு அல்லானூர் அருகே இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பனை கொன்றுவிட்டு நாடகமாடியவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Allanur ,Chengalpattu ,CHENNAI ,
× RELATED கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார...