சென்னை: சென்னையில் மோட்டார் வாகன சட்டப்படி வாகன பதிவு எண் பலகையில் பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் போன்ற ஸ்டிக்கர் ஓட்டியதாக நேற்று ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.2.13 லட்சம் வசூலிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் மோட்டார் வாகன சட்டப்படி வாகன பதிவு எண் பலகையில் பிரஸ், காவல், வக்கீல், டாக்டர் போன்ற வாசகங்கள் ஓட்டுவது குற்றம் என்றும், எனவே அரசு அனுமதி வழங்காக தனியார் வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டி இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த கால அவகாசம் முடிந்த நிலையில் மே 2 அதாவது நேற்று முதல் சென்னை பெரு நகர காவல் எல்லையில் போக்குவரத்து போலீசார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வாகன பதிவு எண் பலகையில் தேவையில்லாத ஸ்டிக்கர் ஓட்டி நபர்களை பிடித்து அபராதம் விதித்தனர். குறிப்பாக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்களது வாகனங்களில் காவல் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை மடக்கி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சென்னை பெருநகர காவல் எல்லையில் காவல், டாக்டர், பிரஸ், வக்கீல், சென்னை மாநகராட்சி, தலைமை செயலகம் என ஸ்டிக்கர் ஓட்டியதாக 427 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.2,13,500 வசூலிக்கப்பட்டது. இந்த வாகன சோதனை 2வது நாளாக இன்றும் சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை appeared first on Dinakaran.