சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக அரசு பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் பழுது ஏற்பட்டு சாலையில் இருக்கக்கூடிய காரணத்தால் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் இறக்கி விட கூடிய சூழல் இருந்தது.
தொடர்ச்சியாக ஊடகங்களில் இது தொடர்பாக செய்திகள் வெளியானத்திற்கு பின்னதாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளை 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து அதனுடைய அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் கடந்த 26ம் தேதி அறிக்கை ஆய்வு செய்து தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது. இதில் பயணிகளுடைய பாதுகாப்பும் விபத்து இல்லாமல் அரசு பேருந்து இயக்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்க்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7,682 புதிய ஆ பேருந்துகள் வாங்க நடவடிக்கை. 652 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 7,030 பேருந்துகள் வரும் நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும். புதிதாக 1,000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பேருந்துகளுக்கு மேல்கூண்டு புதுப்பிக்கப்பட்டு 839 பேருந்துகள் இயக்கம். எஞ்சிய பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.