சென்னை : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், தமிழ்நாடு முழுவதும் 86 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமையே மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல்கள் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், முன்பே திட்டமிட்டபடி, வரும் மே 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இதையொட்டி தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருவதால், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது.
தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் மே 6ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் எனவும், அனுமதி கிடைக்காவிட்டால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு 94.03 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 95 விழுக்காட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.