×
Saravana Stores

மக்கள் போராட்டம் எதிரொலி: சாத்தான்குளத்தில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை

சாத்தான்குளம், மே 3: சாத்தான்குளம் பேருராட்சியில் 15 வார்டுகளில் 85 தெருக்கள் உள்ளன. இதில் 1வது வார்டு பகுதியில் சண்முகபுரம், கிருஷ்ணன் கோயில் தெரு, மேல சாத்தான்குளம் ஆகிய தெருக்கள் உள்ளன. இங்கு 402 குடியிருப்புகளும், 261 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 15 பொது நல்லிகளும் உள்ளன. இப்பகுதியில் சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீர் போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து குடிநீர் பொருத்துநரால் ஆய்வு நடந்தது. அப்போது அனைத்து வீடுகளிலும் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் குடிநீர் விநியோகம் செய்யும்போது மின்சாரம் இல்லாத நேரத்தில் அனைத்து வீடுகளுக்கும் சீராக குடிநீர் வருவதும் உறுதி செய்யப்பட்டது. குடிநீர் திறக்கும் நபர் சரியாக வால்வு திறக்காததாலும் பிரச்னை நிலவியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மாற்று நபரை கொண்டு வால்வை முழுமையாக திறக்க அனுமதிக்கப்பட்டு, நேற்று 11 லட்சம் கொள்ளளவு நீர்தேக்கத்தொட்டியில் முழு கொள்ளளவு தண்ணீர் ஏற்றப்பட்டு 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு, வீட்டு இணைப்புகள் மற்றும் பொது நல்லிகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், அனைத்து வீடுகளிலும் உள்ள மின் மோட்டாரை அகற்ற 15 நாட்கள் அவகாசம் வழங்கியும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் மோட்டார்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post மக்கள் போராட்டம் எதிரொலி: சாத்தான்குளத்தில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Chatankulam ,Shanmugapuram ,Krishnan Koil Street ,Mela Satankulam streets ,
× RELATED விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்