×

மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை

தூத்துக்குடி, மே 3: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழு அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், வெடிபொருள் குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில், வெயிலின் காரணமாக ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், வெடிபொருள் குடோன்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் குவாரிகளில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவைக் கூட்டி பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், வெடிபொருள் குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களின் உரிமைதாரர்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.  அரசின் நிலையான வழிகாட்டு முறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மாவட்டத்தில் அலுவலர்கள் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதுடன், விதிமுறைகள் பின்பற்றப்படாமலும் உரிமம் ஏதும் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்தை வைத்து பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயங்குவது கண்டறியப்பட்டாலோ மற்றும் கல் குவாரிகளில் எந்தவொரு முன் அனுமதியும் இல்லாமல், முறையான முன்னெச்சரிக்கைகள் ஏதும் கடைபிடிக்கப்படாமல் சட்டத்திற்கு புறம்பாக குவாரிகளில் வெடிபொருட்கள் பயன்படுத்தினாலோ மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர்கள், டிஎஸ்பிக்கள், மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Security Committee ,Thoothukudi ,District Fire Prevention and Factories Safety Committee ,Tuthukudi Collector's Office ,Collector ,Lakshmipati ,Tuthukudi ,Security Committee Emergency Advisory ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு