நெல்லை, மே 3: கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலை வீசுவதால் பட்டாசு, வெடிமருந்து குடோன்களில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் எஸ்பி சிலம்பரசன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், தற்போது கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலை வீசுவதால் அதன் காரணமாக காட்டுத் தீ தடுப்பு, பிற இடங்களில் தீ விபத்து தடுப்பு, பட்டாசு உற்பத்தி, பட்டாசு கடைகள், மற்றும் வெடி மருந்து குடோன்களில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேற்கண்ட இடங்களில் அதிகாரிகள் குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சேரன்மகாதேவி சப் கலெக்டர் அர்பித் ஜெயின், நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் வினோத், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் (பொறுப்பு) சிவகுமார் மற்றும் அனைத்து தாசில்தார்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post வெப்ப அலை வீசுவதால் வெடிமருந்து குடோன்களில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு appeared first on Dinakaran.