நெல்லை, மே 3: வள்ளியூரில் இருந்து திசையன்விளைக்கு பஸ்சில் வந்த இளம்பெண்ணிடம் 3.5 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளை செல்வமருதூரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (43). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா (38). நேற்று முன்தினம் வள்ளியூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் வீடு திரும்ப வள்ளியூரில் இருந்து திசையன்விளைக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் பயணித்தார். அப்போது அவர் தனது கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் நகையை பத்திரப்படுத்தும்பொருட்டு சேலையின் ஒரு பகுதியில் மடித்து அதனின் உள்ளே நகையை முடிந்து வைத்திருத்தார்.
திசையன்விளை பஸ் நிலையம் வந்ததும் பஸ் நின்றது. இதையடுத்து பஸ்சில் இருந்து கீழே இறங்கிய கவிதா தன்னுடைய சேலையில் முடிந்து வைத்திருந்த நகையை பார்த்த போது அது மாயமானது கண்டு பதறினார். மாயமான நகையின் மதிப்பு சுமார் ₹1.75 லட்சம் ஆகும். இதையடுத்து பஸ்சிற்குள் மீண்டும் ஏறிய அவர் முழுவதும் தேடிப் பார்த்தபோதும் நகை கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பின்னர் இதுகுறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்ேபரில் விரைந்துவந்த எஸ்ஐ ப்ரியராஜ்குமார் மற்றும் போலீசார், அந்த பஸ்சிற்குள் நகையை தேடிய போதும் கிடைக்கவில்லை. இதைடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பஸ் நிலைய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் திசையன்விளை பஸ் நிலையத்திற்குள் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிபவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 3.5 பவுன் நகை மாயம் appeared first on Dinakaran.