×
Saravana Stores

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

சென்னை: வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் போலி சான்றிதழ்கள் தடுக்கப்படும் என்றும் பரிசோதனை மையங்களின் செயல்பாடு மேம்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வாகன பரிசோதனை மையங்களில் முறைகேடுகளை தவிர்க்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிதாக பியூசிசி 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் கூறியதாவது: வாகனப் புகை பரிசோதனை மையங்களில் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் போக்குவரத்து துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது பியூசிசி 2.0 செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பியூசிசி 2.0 செயலியில் பல முக்கியமான அம்சம்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனப் புகைப் பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும்.

அந்த அலைபேசியில் இந்த பியூசிசி 2.0 செயலியை நிறுவி இயக்க வேண்டும். இது ஜிபிஎஸ் வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகனப் புகைப் பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். இதன் மூலம் வாகனப் புகைப் பரிசோதனை செய்யும் போது இரண்டு புகைப்படங்களை, ஒன்று வாகன பதிவெண்ணை தெளிவாக காட்டும்படியும், மற்றொன்று வாகனத்தின் பதிவெண், புகைப் பரிசோதனை மையத்தின் பெயர் பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒருசேர இருக்குமாறு எடுக்கப்பட வேண்டும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இரண்டு புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ இவை மூன்றையும் பதிவேற்றம் செய்யாமல் இந்த செயலியை பயன்படுத்த இயலாது. இவை பதிவேற்றம் செய்யப்பட்டால் தான் புகைப் பரிசோதனை சான்றிதழை பதிவிறக்கம் செய்யவோ அல்லது அச்சு எடுக்கவோ இயலும். அதேபோல சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகைப் பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலே புகைப் பரிசோதனையை இனி செய்ய இயலாது.

மையங்கள் பயன்படுத்தும் மென்பொருளை இந்த பியூசிசி 2.0 செயலியை இனி பயன்படுத்த முடியாது. மாறாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியை பொருத்தினால் மட்டுமே இந்த செயலி செயல்படும். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை வரும் 6ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்த செயல்முறை விளக்கத்தை வாகனப் புகை பரிசோதனை மைய சோதனையாளர் மற்றும் உரிமைதாரர் ஆகியோருக்கு அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வழங்குவார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை வரும் 6ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

The post போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of Transport ,Chennai ,Commissioner ,Sanmuksundaram ,Dinakaran ,
× RELATED அதிகப்படியான கார்பன் உமிழ்வால்...