×
Saravana Stores

நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஜூன் 2வது வாரம் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. 2024ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்து 2 நிமிடங்களில் தனது உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று தான் முன் வைத்த கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் தமிழக ஆளுநர் புறக்கணித்தார் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, கூட்டம் முடிவதற்கு முன், தேசிய கீதம் பாடப்பட்டது. அதற்கு முன்னதாக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதற்கு அனைத்துக்கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுவதுமாக வாசித்து முடித்தார். இந்த சம்பவம் அன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தொடர்ந்து 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து 2024-2025ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதியும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதன்பின் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் 7 கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், ஜூன் 4ம் தேதிதான் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று அதற்கான நிதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

The post நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது? துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Tamil ,Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் 22ம் தேதி...