×
Saravana Stores

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிக்க ஆய்வு: மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

சென்னை: பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிப்பு செய்ய ஆய்வு பணிகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிப் படி பதவியேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம், மறுநாளே நடைமுறைக்கு வந்தது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். மாநிலம் முழுதும் தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பேருந்துகளில் பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.இந்நிலையில், இந்த திட்டத்தை மேம்படுத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சாதாரண பேருந்துகளுடன் கூடுதலாக எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் இந்த திட்டத்தை நீட்டிப்பு செய்ய ஆய்வு பணிகளை மாநகர போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 3,200 பேருந்துகளில் 50 சதவீத பேருந்துகள் தற்போது சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இருப்பினும், சில வழித்தடங்களில் செல்லும் சொகுசு பேருந்துகளில் பெண் பயணியர் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது, ஏன் அவர்கள் சொகுசு பேருந்துகளில் செல்ல விரும்புகின்றனர், கூட்ட நெரிசல் காரணமா, உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

அடுத்த சில வாரங்களுக்கு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே திட்டத்தை சொகுசு பேருந்துகளிலும் விரிவுபடுத்தலாமா அல்லது சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்கலாமா என்பதை இறுதி செய்து, பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும். சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணி நடத்துனர்கள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது. பிராட்வே – தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், மாநகர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக, எந்தெந்த நிறுத்தங்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கின்றனர் என்பது குறித்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளுக்கும் நீட்டிக்க ஆய்வு: மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : City Transport Corporation ,CHENNAI ,Municipal Transport Corporation ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED அக்.24ம் தேதி வரை ரூ. 1000 பாஸ் பெறலாம் மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்