×
Saravana Stores

விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் விதிமீறல்

விழுப்புரம், மே 3: விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் அதிக கட்டணம் வசூலித்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட இந்திய குடியரசு கட்சி தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; விழுப்புரம் மாவட்டத்தில் தங்களின் அலுவலக அதிகார எல்லைக்குட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய நகரங்களில் தமிழக அரசு கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் ஒப்பந்தம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2024ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஒப்பந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாமல் தமிழக அரசின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் உரிமங்களை பெற வருகின்ற விண்ணப்பதாரர்களிடம் அசல் உரிமத்தோடு நகல் உரிமமும் அசல் போலவே அலுவலகத்திலேயே போட்டு தருவதாக நிறுவனத்தின் விழுப்புரம் மண்டல மேலாளர் ஆசை வார்த்தைகள் கூறி சட்டவிரோதமாக நகல் ஒன்றுக்கு ரூ.100 வீதம் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.10,000 வரை நகல் போட்டுக் கொடுப்பதன் மூலம் சட்டவிரோத வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் ஒப்பந்தம் அளித்த 2018ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களை அழைத்து நியாயமான முறையில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு இந்த குறிப்பிட்ட மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சட்டவிரோதமாக வருவாய் ஈட்டியும், அரசு வழிகாட்டுதல்படி செயல்படாமல் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக மக்களிடம் பணத்தை கொள்ளை அடிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு துணைபோன வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் விதிமீறல் appeared first on Dinakaran.

Tags : Villupuram District Villupuram ,Villupuram ,Villupuram, Senchi and Tindivanam District Transport Offices ,Villupuram District Indian Republican Party ,district ,Dinakaran ,
× RELATED சி.வி.சண்முகம் திடீர் கைது