×

தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே

புதுடெல்லி: ஒன்றிய ஆளும் பாஜ கட்சியின் வருவாய் மற்றும் செலவுகள் குறித்து ஆங்கில இணையதள செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014ல் ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கட்சி அலுவலங்கள் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்த ஆண்டே, 635 மாவட்டங்களில் புதிய அலுவலகங்களைக் கட்ட பாஜ முடிவு செய்தது.

இந்த இலக்கு மார்ச் 2023க்குள் 887 மாவட்ட கட்சி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023 மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புதிதாக 10 பாஜ கட்சி அலுவலகங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 290 மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவை கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதில் பாஜ கட்டியிருப்பவை எதுவும் சாதாரண அலுவலகங்கள் அல்ல.

கடந்த 2018ல் டெல்லியில் தீன தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் 1.70 லட்சம் சதுர அடியில் பாஜ தலைமையகம் கட்டப்பட்டது. இந்த இடம் டெல்லியின் வர்த்தக மையமான கன்னாட் பிளேசில் இருந்து ஒரு கி.மீக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. இதை திறந்து வைத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், ‘உலகிலேயே மிகப்பெரிய கட்சி அலுவலகம் இது’’ என பெருமிதத்துடன் கூறினார். ஏற்கனவே 11, அசோகா சாலையில் உள்ள பழைய கட்சி அலுவலகத்தை பாஜவின் ஐடி அலுவலகமாகவும், தேர்தல் வார் ரூமாகவும் மாற்றப்பட்டது.

2021ல் குர்கான் பாஜ அலுவலகம் 1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டது. 2023 டெல்லி பாஜ அலுவலகம் கோயில் கட்டமைப்பில் 30,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. போபாலில் மபி பாஜ அலுவலகம் ரூ.100 கோடியில் கட்டப்பட்டது. அசாம் பாஜ அலுவலகம் ரூ.25 கோடியில் கட்டப்பட்டது. பாஜவின் தலைமையகம் கட்டுவதற்கு மட்டுமே ரூ.700 கோடி செலவிடப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறி உள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பாஜ கடந்த 10 ஆண்டில் புதிய கட்டிடத்திற்கு செய்திருப்பதாக கூறியிருக்கும் அதிகாரப்பூர்வ செலவு ரூ.1,124 கோடி மட்டுமே.

நட்டா கூறிய படி, 290 கட்சி அலுவலகங்களை பாஜ கட்டி முடித்திருப்பதாக வைத்துக் கொண்டால், தோராயமாக ஒரு மாவட்ட அலுவலகம் கட்ட ரூ.3 கோடி என்றாலும் ரூ.870 கோடி செலவிட்டிருப்பார்கள். 887 மாவட்ட அலுவலகங்கள் கட்ட ரூ.2,661 கோடி செலவாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் தலைநகருக்கு ஒரு பெரிய அலுவலகம் கட்ட குறைந்தபட்சம் ரூ.25 கோடி என வைத்துக் கொண்டால் அதற்கு ரூ.900 கோடி செலவாகும். அப்படி என்றால், கட்சி அலுவலகம் கட்டுவதற்கே பாஜ ரூ.3,500 கோடிக்கு மேல் செலவிட தயாராக உள்ளது.

அடுத்ததாக, தேர்தல் செலவை எடுத்துக் கொண்டால், 2015-16 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் பாஜ தேர்தல் செலவாக ரூ.5,744 கோடி செலவிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டி உள்ளது. ஆனால் தனியார் ஆய்வு நிறுவனங்களின் கணக்குபடி, 2019 மக்களவை தேர்தலில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த செலவு ரூ.60,000 கோடி. இதில் 45 சதவீதம், அதாவது ரூ.27,000 கோடியை பாஜ மட்டுமே செலவிட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் மொத்தமாக ரூ.1.35 லட்சம் கோடி செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதிலும் 2019 போலவே பாஜ 45 சதவீதம் செலவிட்டால், ரூ.60,750 கோடி. இந்த 2 மக்களவை தேர்தலுக்கான பாஜவின் செலவு ரூ.87,750 கோடி. அல்லது, கடந்த முறை போலவே பாஜ ரூ.27,000 கோடி மட்டுமே செலவிட்டாலும் கூட இரு தேர்தல்களுக்கான மொத்த செலவு ரூ.54,000 கோடி.

அடுத்ததாக சட்டப்பேரவை தேர்தல்கள் கடந்த 10 ஆண்டில் 4,123 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 5 ஆண்டுக்கு ஒருமுறை என 2 முறை தேர்தல் நடந்துள்ளது. ஒரு தொகுதிக்கு ரூ.2 கோடி என வைத்துக் கொண்டாலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜ ரூ.16,492 கோடி செலவிட்டிருக்கும்.

இப்படி பாஜவின் செலவுகள் கடந்த 10 ஆண்டில் பல்லாயிரம் கோடிகளாக இருக்கும் நிலையில், அதன் வருவாய் வெறும் ரூ.14,663 கோடி மட்டுமே. கட்டிடம் கட்ட, தேர்தலுக்கு என பாஜ ரூ.74,053 கோடி முதல் ரூ.1,07,803 கோடி வரை செலவிட்டிருக்கிறது. இது அதன் வருவாயை விட 5 முதல் 7 மடங்கு வரை அதிகம். எனவே, பாஜவுக்கு இந்த பணம் எப்படி, எங்கிருந்து வந்தது. அரசியல் கட்சிகளின் நிதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறிக் கொள்ளும் பாஜவின் வருவாய்க்கும் செலவுக்குமே பெரும் வித்தியாசம் இருக்கும் நிலையில், அவர்களின் நேர்மை கேள்விக்குறியதாகி இருக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

* இதுக்கெல்லாம் பணம் எப்படி?
கடந்த 2021 மார்ச் மாதம் வரை பாஜவில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 182 எம்எல்ஏக்கள் இணைந்திருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு தகவல் வெளியிட்டிருந்தது. 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் இது 444 எம்எல்ஏவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களை வளைக்க ஆளுக்கு தலா ரூ.25 கோடி தருவதாக பேரம் பேசியதாக பாஜ மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டி உள்ளார்.

இதே போல கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி தருவதாக பாஜ பேரம் பேசியதாக சித்தராமையா கூறியிருந்தார். இதற்கெல்லாம் பாஜவுக்கு பணம் வந்தது எப்படி? கர்நாடகாவில் பாஜ ஆட்சியில் ஒப்பந்ததாரர்களிடம் 40% கமிஷன் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்படியென்றால் பாஜ ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற கமிஷன் மூலம் பாஜ பல்லாயிரம் கோடி பணத்தை திரட்டுகிறதா என்றும் ஆங்கில இணையதளம் சந்தேகம் கிளப்பி உள்ளது.

 

The post தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Union ,BJP government ,Modi ,Dinakaran ,
× RELATED டெல்லி பாஜ அலுவலகத்தில் தீ