பெங்களூரு: பாலியல் வழக்கில் சிக்கிய ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருக்கும் நிலையில், அவர் இந்தியாவிற்குள் எந்த வழியாக வந்தாலும் உடனடியாக கைது செய்யும் விதமாக அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடக ஹாசன் தொகுதி மத சார்பற்ற ஜனதா தள எம்.பியும், இத்தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்கள் பரவி, தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரஜ்வல் மஜத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். அவரது தந்தை ரேவண்ணாவும் கர்நாடக அமைச்சராக இருந்தவர். இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக ஒரு வார கால அவகாசம் கேட்டிருக்கும் நிலையில், அவருக்கு மே 15ம் தேதி இந்தியாவிற்கு திரும்புவதற்கான விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருப்பது தெரிந்ததும் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது. அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா அவகாசம் கேட்டிருக்கிறார். அவருக்கு அந்த கூடுதல் அவகாசத்தை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து எஸ்.ஐ.டி உறுப்பினர்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு பெண்ணும் புகார் அளித்திருக்கிறார். அவரது விவரங்களை வெளிப்படுத்த முடியாது என்றார்.
* வெளிநாடு தப்பியது எப்படி?
ஆபாச வீடியோ வெளியான மறுநாளே எப்படி பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றார். அவர் ஜெர்மனி செல்ல விசா எடுக்காத நிலையில் எப்படி வெளிநாடு பயணம் மேற்கொண்டார் என கேள்வி எழுந்தது. அதாவது ஹாசன் தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. ஆனால் அதற்கு முன்பே அவரது ஆபாச வீடியோக்கள் வெளியாகி விட்டன. இதையடுத்து தேர்தல் நாளில் ஹாசனில் வாக்களித்த பிரஜ்வல் உடனடியாக அவர் ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இதற்கு அவர் வழக்கமாக பயன்படுத்தும் பாஸ்போர்ட்டை பயன்படுத்தவில்லை. அதை பயன்படுத்தினால் கட்டாயம் விசா வேண்டும். விசா எடுக்க தாமதமும் ஏற்படலாம். இதனால் பிரஜ்வல் எம்.பிக்களுக்கான ‘டிப்ளமெட்டிக்’ பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனி பறந்துள்ளார். டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பல நாடுகளுக்கு விசா எடுக்காமலே செல்லும் வசதி உள்ளது. இதனால் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியை அவர் பெறவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* வீட்டில் சிறப்பு பூஜை நடத்திய ரேவண்ணா
பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஹோலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் செய்தார். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் எஸ்ஐடி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பிரச்னைகளில் இருந்து விடுபட ரேவண்ணா, ஹாசன் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று ஹோமம் வளர்த்து சிறப்பு பூஜை உள்ளிட்ட சடங்குகளை செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன.
* ரேவண்ணா முன்ஜாமீன் மனு
பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது அவர்கள் வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்துவரும் நிலையில், அவர்கள் இருவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எஸ்.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருக்கிறார். இந்நிலையில், அவரது தந்தையும் எம்.எல்.ஏவுமான எச்.டி.ரேவண்ணா, இந்த பாலியல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
The post ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்: கர்நாடக போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.