சென்னை: வெயில் காலங்களில் இதுவரை பார்க்காத வகையில் நேற்று திடீரென மெரினா கடற்கரையில் வெயிலும் அடிக்குது, காற்றும் வீசுது, மணலும் பறந்தது என்று தூய்மை பணியாளர்கள் கூறினர். கோடைகாலம் தொடங்கியதில் இருந்து சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பே சென்னை மாநகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதேசமயம் காலை முதலே காற்றும் அதிகமாக வீசியது. இதனால் கடல் மணற்பரப்பில் இருந்து மணல் பறந்து சர்வீஸ் சாலையை முழுவதும் மூடியது. தூய்மைப் பணியாளர்கள் அந்த மணலை தொடர்ந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் காற்று அதிகமாக வீசியதால் தொடர்ந்து மணல் பறந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
மேலும் சர்வீஸ் சாலையில் இருந்த தடுப்புகளை கூட காற்று தூக்கி வீசியது. இதனால் கடற்கரைக்கு காலை நேரத்தில் நடைபயிற்சி மற்றும் பொழுது போக்கிற்கு வருபவர்கள் கூட அதிகளவு வரவில்லை. இதனால் மெரினா கடற்கரை நேற்று வழக்கத்திற்கு மாறாக வெறிச்சேடியது.
இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், காலையில் இருந்து காற்று அதிகமாக வீசியது, கூடவே மணலும் சேர்ந்து பறந்து வருவதால் ரொம்ப கஷ்டமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் பணிபுரிந்து வருகிறோம், வெயில் காலங்களில் இது போன்று காற்று வீசியதே கிடையாது. மழை மற்றும் புயல் காலங்களில் தான் இதுபோன்று காற்று வீசும். காற்று வீசுவதால் கண்ணில் மணல் விழுகிறது, அதனால் குப்பைகளை கூட எடுக்கவே முடியவில்லை. காலை 8 மணி முதல் காற்றுடன் மணலும் சர்வீஸ் சாலையில் சேர்ந்தது. நாங்களும் தொடர்ந்து அகற்றிக் கொண்டு தான் இருக்கிறோம் என்றனர்.
The post இதுவரை காணாத வகையில் திடீரென மாறியது சூழல் மெரினாவில் வெயிலுடன் வீசுது அனல் காற்று; புழுதியும் பறக்குது: தூய்மைப்பணியாளர்கள் திணறல் appeared first on Dinakaran.