×
Saravana Stores

சிபிஐ எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: சிபிஐ எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) ஆகியவற்றை பாஜ ஆளாத மாநில அரசுகளுக்கு எதிராக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினரை முடக்கும் விதமாக ஒன்றிய பாஜ அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என பல்வேறு மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இதுதொடர்பாக மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மேற்குவங்கத்தின் மாநில எல்லைக்குள் ஒன்றிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை திரும்ப பெற்ற பிறகும், சிபிஐ தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது” என்று குற்றம்சாட்டியிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசன பிரிவு 131 என்பது உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட புனிதமான அதிகார வரம்பு, அதை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மாநில அரசு மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்குகள் ஒன்றிய அரசால் பதிவு செய்யப்படவில்லை.

அவை சிபிஐயால் பதிவு செய்யப்பட்டவை. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சிபிஐ என்பது சட்டப்பூர்வமான அதிகாரம் அல்ல. அதுஒரு விசாரணை நிறுவனம்” என்றார். இந்த வழக்கில் வாதங்கள் முடிவடையாததால் விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post சிபிஐ எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : CBI ,Union government ,Supreme Court ,New Delhi ,Enforcement Directorate ,Income Tax Department ,Central Bureau of Investigation ,BJP ,
× RELATED தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க...